அமீரக செய்திகள்

துபாயில் விளம்பர பேனர்களாக மாறப்போகும் பள்ளிப் பேருந்துகள்..!! புதிய முயற்சிக்கு RTA ஒப்புதல்..!!

துபாய் முழுவதும் சாலைகளின் ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள திரைகள், பொதுப் பேருந்துகள், டாக்ஸி என பல விருப்பங்களின் மூலமாகவும் விளம்பம் மற்றும் தள்ளுபடிக்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளி பேருந்துகளிலும் இது போன்ற விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்களை கூடிய விரைவில் நம்மால் காண முடியும்.

அதாவது பள்ளிப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நேற்று வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. பள்ளிப் பேருந்துகளுக்கு உள்ளேயும் வெளியேயும் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம், பள்ளிப் போக்குவரத்து ஆபரேட்டர்களுக்கு கூடுதல் வருவாயை வழங்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த விளம்பரங்கள், பள்ளி மாணவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்கும் வகையில், தயாரிப்புகள் மற்றும் சலுகைகளை சரியான முறையில் விளம்பரப்படுத்துவதை உறுதிசெய்ய, கடுமையான தரநிலைகள் மற்றும் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என்று RTA தெரிவித்துள்ளது.

இந்நிலையில், RTAவில் உள்ள பொதுப் போக்குவரத்துக் கழகத்தின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டுத் துறை இயக்குநர் அடெல் ஷக்ரி, பள்ளிப் பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விளம்பரத் தரங்கள் மற்றும் தேவைகள் குறித்து விவரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: “அமீரக சட்டங்களின்படி, விளம்பரங்கள் மாணவர்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் மற்றும் சரியான கொள்கைகள், ஒழுக்கங்கள் மற்றும் நடத்தைகளை ஊக்குவிக்க வேண்டும். RTAவின் இணையதளம் மூலம் விளம்பர அனுமதி மற்றும் துபாய் முனிசிபாலிட்டியிடமிருந்து விளம்பரத்தின் உள்ளடக்கத்திற்கான ஒப்புதல்  போன்றவை அவசியம்.” என்றார்.

மேலும், கவனச்சிதறலைத் தடுக்க டிரைவருக்குப் பின்னால் ஆன்போர்டு விளம்பரத் திரைகள் வைக்கப்பட வேண்டும், மேலும் எந்த விளம்பரங்களும் கதவுகள் அல்லது அவசரகால எக்ஸிட்களைத் தடுக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, பேருந்துகளின் வெளிப்புறத்தில் உள்ள விளம்பரங்கள் ‘பள்ளிப் பேருந்து’ என்ற பலகையை மறைக்கவோ அல்லது ஓட்டுநரின் பார்வையைத் தடுக்கவோ கூடாது, குறிப்பாக பின்பக்க கண்ணாடியில் விளம்பரம் செய்யக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!