அமீரக செய்திகள்

துபாய்: ஒரு மாதத்திற்குப் பின் இன்று முதல் மீண்டும் சேவைகளைத் தொடங்கும் மூன்று மெட்ரோ நிலையங்கள்!!

கடந்த ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் நாடு முழுவதும் பெய்த வரலாறு காணாத பெருமழையால் விமானப் போக்குவரத்து உட்பட அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக, துபாயின் முதுகெலும்பாக விளங்கும் மெட்ரோ சேவை வானிலை இடையூறு காரணமாக சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது மற்றும் நான்கு மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், அவற்றில் மூன்று நிலையங்கள் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே மீண்டும் தொடங்கப்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. மூடப்பட்ட நான்கு நிலையங்கள் மே 28 ஆம் தேதிக்குள் இயல்பான செயல்பாடுகளை மீட்டெடுக்கும் என்று RTA முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக RTA தற்பொழுது வெளியிட்ட அறிவிப்பில், மெட்ரோ நிலையங்களின் முழு செயல்பாட்டுத் தயார்நிலையையும் அவை அனைத்து பாதுகாப்புத் தேவைகளையும் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து பராமரிப்பு மற்றும் சோதனை வேலைகளும் முடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

அந்தவகையில், ஆன்பேசிவ் (onpassive), ஈக்விட்டி (equiti) மற்றும் மஷ்ரெக் (mashreq) ஆகிய மூன்று மெட்ரோ நிலையங்களும் இன்று மே 19, 2024 அன்று வழக்கம் போல் செயல்படும். மேலும், எனர்ஜி மெட்ரோ நிலையத்தில் அடுத்த வாரம் செயல்பாடுகள் தொடங்கப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது.

வானிலை இடையூறுகளுக்குப் பிறகு, மெட்ரோ நிலையங்கள் மற்றும் அவற்றின் வசதிகளான பிளாட்ஃபார்ம் கதவுகள், லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள் மற்றும் பிற சேவை வசதிகளின் செயல்திறனை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான செயல்பாட்டு சோதனைகளை நடத்தியதாக RTA தெரிவித்துள்ளது.

இந்த சோதனைகளில் மெட்ரோ நிலையங்களுக்கு இடையே சுமூகமான இயக்கத்தை பராமரிக்க ரயில்களின் முக்கிய குறிகாட்டிகள் மற்றும் ரயில் நிலையங்களில் மெட்ரோ பயண நேரங்களின் துல்லியத்தை உறுதி செய்வதற்கான சேவை அதிர்வெண் சோதனைகள் (பயணிகள் இல்லாமல்) ஆகியவை அடங்கும் என்பதையும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!