ADVERTISEMENT

கடந்த ஒரே ஆண்டில் 158,000 கோல்டன் விசாக்களை வழங்கிய துபாய்!! GDRFA வெளியிட்ட தரவு..!!

Published: 24 May 2024, 9:26 AM |
Updated: 24 May 2024, 10:13 AM |
Posted By: Menaka

உலகெங்கிலும் உள்ள பல்வேறு பிரிவில் திறன்படைத்தவர்களை அமீரகத்திற்கு ஈர்க்கும் முயற்சிகளில் ஒன்றான கோல்டன் விசா எனப்படும் 10 ஆண்டு கால ரெசிடென்ஸி திட்டமானது அமீரக அரசால் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட முதல் சிறிது காலத்தில் கோல்டன் விசா பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டாலும் அதனைத் தொடர்ந்து வந்த காலத்தில் அதிகப்படியான நபர்கள் கோல்டன் விசாவிற்கு விண்ணப்பித்து அதனை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

இது குறித்து தற்பொழுது வெளியான தகவலின் படி துபாயில் கடந்த ஆண்டான 2023 இல் மட்டும் சுமார் 158,000 கோல்டன் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக துபாயில் உள்ள குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) அறிவித்துள்ளது.

கோல்டன் விசா என்பது 10 ஆண்டுகள் வரை நாட்டில் தங்க அனுமதிக்கும் நீண்ட கால விசா வகையாகும். இது சிறந்த மாணவர்கள் மற்றும் சொத்து முதலீட்டாளர்கள், பிரபலமானவர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் உள்ள திறமையானவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் 6 மாதத்திற்கு மேல் அமீரகத்தை விட்டு வெளியே தங்கியிருந்தாலும் விசா கேன்சல் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் அனைத்து பிரிவுகளிலும் வழங்கப்பட்ட 79,617 விசாக்களின் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 2023 இல் விநயோகிக்கப்பட்ட கோல்டன் விசாக்களின் எண்ணிக்கை இரு மடங்காகும் என்று GDRFA துபாயின் இயக்குனர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அஹ்மத் அல் மர்ரி சுட்டிக் காட்டியுள்ளார். இந்த கோல்டன் விசாக்களை தமிழ் நடிகர்களான கமலஹாசன், அஜித்குமார், விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் ஓரிரு தினங்களுக்கு முன் ரஜினிகாந்தும் கோல்டன் விசாவைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர, துபாய் விமான நிலையங்கள் முழுவதும் பயணிகள் சேவைகள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை கணிக்க செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் அவர் கூறியுள்ளார். கூடுதலாக, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஆணையம் சுமார் 3,518,000 பரிவர்த்தனைகளை செயல்படுத்தியதாகவும் அல் மர்ரி தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த ஆண்டு, 60 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் துபாயின் விமானம், நிலம் மற்றும் கடல் துறைமுகங்கள் வழியாக பயணித்துள்ளதாகவும் GDRFA தரவுகள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel