ADVERTISEMENT

UAE: அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க துபாய்க்கு படையெடுக்கும் இந்தியர்கள்.. எண்ணற்ற தள்ளுபடிகளை வழங்கும் தங்க விற்பனையாளர்கள்..!!

Published: 7 May 2024, 10:57 AM |
Updated: 7 May 2024, 10:57 AM |
Posted By: Menaka

இந்து மத கலாச்சாரம் மற்றும் மரபுகளின்படி, அட்சய திருதியை நாளானது தங்க நகைகளை வாங்குவதற்கான ஒரு நன்னாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் வாங்கக் கூடிய தங்கநகைகள் மென்மேலும் பெருகும் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உண்டு. குறிப்பாக, பெண்கள் அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்கிவிட வேண்டும் என்று நினைப்பார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில், எதிர்வரும் மே 10ம் தேதி அன்று அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல இந்திய சுற்றுலாப் பயணிகள் தங்கம் வாங்கும் முனைப்பில் துபாய்க்கு தங்கள் பயணங்களை திட்டமிடுவதாக பயண முகவர்களும், தங்கம் விற்பனையாளர்களும் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில், தங்கம் விற்பனை செய்யும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், துபாயில் தங்கத்தின் விலையானது போட்டி விலைகளுக்கு பிரபலமானது என்பதால், இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான இடமாக துபாய் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

இதுதவிர துபாயில் பல்வேறு வடிவிலான தங்க நகைகள், நாணயங்கள் மற்றும் தங்க பார்கள் என அனைத்தும் கிடைக்கின்றன. குறிப்பாக அட்சய திருதியை போன்ற பண்டிகைகளின் போது, ​​துபாயின் தங்க சந்தைகள் மற்றும் போட்டி விலைகள் போன்ற காரணிகள் துபாயை மக்கள் தங்கம் வாங்குவதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய தேர்வாக மாற்றியுள்ளன.

மேலும், அட்சய திருதியை முன்னிட்டு துபாயில் உள்ள நகைக்கடைக்காரர்கள் தங்கம், வைரம் மற்றும் விலைமதிப்பற்ற உலோக நகைகளை வாங்குபவர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள், பூஜ்ஜிய கட்டணத்தில் EMI மற்றும் பல பரிசுகளை அறிவித்துள்ளனர். எனவே, துபாய்க்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தை திட்டமிடுவதாக பயண முகவர்களும் நகைக்கடை உரிமையாளர்களும் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

நகைக்கடை உரிமையாளர்களின் கூற்றுப்படி, இந்தியாவுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை குறைவு மற்றும் உலகளாவிய நகை வர்த்தகத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கியத்துவம் போன்றவற்றின் காரணமாக பரந்த அளவிலான சர்வதேச டிசைன்களில் தங்கம் வாங்க விரும்பும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு துபாய் மிகவும் கவர்ச்சிகரமான இடமாக அமைகிறது.

கூடுதலாக, துபாயின் சுற்றுலா நட்புக் கொள்கைகள், விசா பெறுவதில் உள்ள எளிமை, வரியில்லா ஷாப்பிங் மற்றும் சுற்றுலாவாசிகள் தாங்கள் செலுத்திய VAT வரியை நாட்டை விட்டு செல்லும் போது திரும்பப் பெற்றுக்கொள்ளும் திட்டங்கள் போன்றவை இந்த பண்டிகை சீசனில் தங்கத்திற்கான ஷாப்பிங் தலமாக துபாயின் நிலையை அங்கீகரிப்பதற்கு பங்களிப்பதாகவும் நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, உலக தங்க கவுன்சில் (World Gold Council) இந்த வார தொடக்கத்தில், நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதிக விலை காரணமாக தங்க நகைகளுக்கான தேவை 10 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்திருந்தது. இந்தியாவில் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக உச்சத்தில் இருந்து வந்த நிலையில், இரண்டாம் காலாண்டில் தங்க நகைகளுக்கான தேவை குறைவாக இருந்ததாக உலக தங்க கவுன்சில் கூறியிருந்தும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel