அமீரகத்தில் மிகவும் ஆபத்தான 10 சாலைகள்: ஒரு வருடத்தில் 352 பேர் பலி.. முதலிடத்தில் இருப்பது எது தெரியுமா..??

ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் (MoI) சமீபத்தில் எந்தெந்த சாலைகள் மற்றும் தெருக்களில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிந்து, 2023 ஆம் ஆண்டிற்கான சாலை பாதுகாப்பு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி, அபுதாபியில் உள்ள அல் ஃபலாஹ் முதல் ராஸ் அல் கைமா (RAK) வரை நீண்டுள்ள அமீரகத்தின் முக்கிய சாலையான ஷேக் முகமது பின் சயீத் சாலை (E311) முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்த சாலையில் 266 விபத்துக்கள் பதிவாகியுள்ளன, இதில் 43 பேரின் உயிரிழப்புகள் உட்பட காயமடைந்தவர்கள் 223 பேர் அடங்குவார்கள்.
இதையடுத்து, எமிரேட்ஸ் சாலை 18 இறப்புகள் மற்றும் 104 வெவ்வேறு அளவுகளில் காயங்கள் என மொத்தம் 122 விபத்துகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதேபோல், துபாயின் ஷேக் சையத் சாலை 16 இறப்புகள் மற்றும் 131 காயங்களுடன் மொத்தம் 147 விபத்துகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும், 184 சாலை விபத்துகளுடன் நான்காவதாக அபுதாபி-அல் அய்ன் சாலை உள்ளது, இதில் 171 பேருக்கு காயங்கள் மற்றும் 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஷேக் மக்தூம் பின் ரஷித் சாலை 12 இறப்புகள் மற்றும் 134 காயங்கள் என மொத்தம் 146 விபத்துகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அடுத்து ஐந்து இடத்தில் உள்ள ஆபத்தான சாலைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
சாலைகள் | இறப்புகள் | காயங்கள் |
அபுதாபி-அல் சிலா | 11 | 62 |
துபாய்-அல் அய்ன் | 10 | 19 |
தாரிஃப் | 7 | 24 |
கோர் ஃபக்கன் | 7 | 17 |
அல் கைல் | 5 | 154 |
இது குறித்து RoadSafetyUAE இன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான தாமஸ் எடெல்மேன் கூறுகையில், ஆபத்தான சாலைகளின் தரவரிசைப் பட்டியல் மொத்த விபத்துகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல, அவை இறப்புகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு வரிசைப் படுத்தப்பட்டுள்ளது என்றும், ஏனெனில், சாலை பாதுகாப்பில் இறப்புகளின் எண்ணிக்கையே வலுவான குறிகாட்டிகள் என்றும் விளக்கமளித்துள்ளார்.
இறப்புகளும் காயங்களும்
2023 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான காயங்கள் ஏற்பட்டதில் துபாய் முதலிடத்திலும், இறப்பு பட்டியலில் அபுதாபி முதலிடத்திலும் இருப்பதாக அமைச்சகத்தின் தரவு வெளிப்படுத்தியுள்ளது.
சாலை விபத்தில் மரணமடைந்தவர்கள்:
- அபுதாபி -133
- துபாய் -121
- ஷார்ஜா -34
- ராஸ் அல் கைமா -30
- உம் அல் குவைன் -16
- அஜ்மான் -11
- ஃபுஜைரா -7
சாலை விபத்தில் காயமடைந்தவர்கள்:
- துபாய் -2,607
- அபுதாபி -1,850
- ஷார்ஜா -387
- ராஸ் அல் கைமா -326
- ஃபுஜைரா -202
- அஜ்மான் -133
- உம் அல் குவைன் -63
விபத்துகள் மற்றும் காயங்களின் அதிகரிப்பு ஆபத்தானது மற்றும் சாலை பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த அழைப்பு விடுக்கிறது என்று கூறிய எடெல்மேன், 2022 இல் காணப்பட்டதை விட இறப்பு எண்ணிக்கை குறைந்து இருப்பதால் ஒட்டுமொத்த புள்ளிவிபரங்களானது சாலை பாதுகாப்பில் முன்னேற்றம் அடைந்ததைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
2023 இல் நாடு முழுவதும் 352 சாலை இறப்புகள் பதிவாகின, இது 2022 இல் 343 இறப்புகளுடன் ஒப்பிடும்போது 3 சதவீதம் அதிகமாகும், ஆனால் 2021 இல் பதிவு செய்யப்பட்ட 381 இறப்புகளுடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் கணிசமாகக் குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
மேலும் அமீரகம் கடந்த 2008 ஆம் ஆண்டில் அதிகமான போக்குவரத்து இறப்புகளைப் பதிவு செய்தது. இதன் பொருள் கடந்த 15 ஆண்டுகளில் சாலை இறப்புகளில் குறிப்பிடத்தக்க அளவிலான அதாவது 67 சதவீதம் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்பு முயற்சிகள்:
நாட்டில் சாலை பாதுகாப்பை மேம்படுத்த அதிக முயற்சிகள் தேவை என்று சுட்டிக்காட்டிய எடெல்மேன், குறிப்பாக, கல்வி மற்றும் போக்குவரத்து சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவதன் மூலம் அதைச் செய்ய முடியும் என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், “19-29 வயதுடைய இளம் பிரிவினருக்கும், 30-39 வயதுப் பிரிவினருக்கும் சாலையில் வலுவான கவனம் தேவை. இந்த இரண்டு முக்கிய பிரிவினரே, சாலை விபத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளைக் கொண்டுள்ளன. ஓட்டுநர்கள் தங்கள் பயணிகள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய சாலை பயனர்களுக்கு, குறிப்பாக பாதசாரிகளுக்கு தங்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel