துபாயில் கட்டப்பட்டு வந்த புதிய ஸ்டேடியம் பேருந்து நிலையமானது (Stadium Bus Station) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று மே 3ம் தேதி வெள்ளிக்கிழமை, எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் ஸ்டேடியம் மெட்ரோ நிலையத்திற்கு பின்புறம் அல் குசைஸ் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த புதிய பேருந்து நிலையம் பயண நேரத்தைக் குறைப்பதையும், பிற வெகுஜனப் போக்குவரத்து விருப்பங்களுக்கு தடையற்ற இணைப்புகளை வழங்குவதையும் இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது பயணிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்றும் RTA தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 19, F22, F23A, F23, F23, F24 மற்றும் W20 பேருந்து சேவைகள் புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் என்றும், அதே சமயம் பேருந்து எண் 23 ஆனது இந்த புதிய பேருந்து நிலையம் வழியாக பயணிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தவிர, 62, X02, X23, X22, X13, X25, X92, X64, X94 ஆகிய வழித்தடங்களில் பயணத்தின் போது பயணிகள் தங்கள் இலக்குகளை விரைவாக அடைவதை உறுதி செய்ய எக்ஸ்பிரஸ் பாதைகளை மேம்படுத்தவுள்ளதாகவும் RTA அறிவித்துள்ளது. அத்துடன், X28 வழித்தடத்தில் செல்லும் பேருந்து அகோரா மால் வரை மட்டும் பயணிக்கும் எனவும் RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், இன்டர்சிட்டி பஸ் ரூட் E102 ஆனது, வார இறுதி நாட்களில் முசாஃபா பஸ் நிலையத்திற்குச் சேவை செய்யும் வகையில் மாற்றியமைக்கப்படும் எனவும், அல் ஜஃபிலியா் நிலையத்திற்குத், அபுதாபி சையத் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையேயான பயண நேரமும் மேம்படுத்தப்படும் என்றும் RTA கூறியுள்ளது.
கூடுதலாக, 19, 23, 27, 43, 62, C04, C10, C15, C18, D03, E102, E307, E400, F08, F17, F22, F23, F23A, F24, F51, W20, X02, X13, X22, X23, X25, X28, X64, X92, X94 ஆகிய 30 வழித்தடங்களின் அட்டவணையிலும் மேம்பாடுகள் செய்யப்படும் என்றும் RTA ஆல் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரூட் 91A ரத்து செய்யப்படும் என RTA தெரிவித்ததுடன், அல் குபைபா பஸ் நிலையத்திலிருந்து ஜெபல் அலி போர்ட் செல்லும் பயணிகள் மாற்று வழித்தடமான 91ஐப் பயன்படுத்தலாம் எனவும் RTA அறிவுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel