மே 18ல் திறப்பு விழா காணும் ‘எக்ஸ்போ 2020 துபாய் மியூசியம்’..!! முதல் 2 நாட்களுக்கு இலவச நுழைவு..!!
நீங்கள் பழைமை வாய்ந்த மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க அடையாளங்களை நேரில் ஆராய்வதில் ஆர்வமுடையவர்களா? அப்படியென்றால் துபாய் மற்றும் அமீரகத்தின் பழமையான தொன்மைகளை இலவசமாக கண்டுகளிக்க உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. ஆம், துபாயில் கட்டப்பட்டு வந்த புதிய ‘எக்ஸ்போ 2020 துபாய் அருங்காட்சியகம் (Expo 2020 Dubai Museum) பார்வையாளர்களுக்காக திறக்கப்பட உள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க எக்ஸ்போ 2020 ஐக் குறிக்கும் புதுமை மற்றும் ஒத்துழைப்புக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், சர்வதேச அருங்காட்சியக தினமான வரும் மே 18ம் தேதி சனிக்கிழமையன்று திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக திறக்கப்படவிருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் முதல் இரண்டு நாட்களுக்கு (மே 18 மற்றும் 19) நீங்கள் இலவச நுழைவை அனுபவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த வார இறுதி நாட்களில் அமீரகத்தை மூன்று விதமான கதைகளுடன் விவரிக்கும் ‘த்ரீ ஸ்டோரி ஆஃப் நேஷன்ஸ்’ கண்காட்சிகளைப் பார்வையிடும் வாய்ப்பையும் நீங்கள் பெறலாம்.
எக்ஸ்போ 2020 கருப்பொருள்களான வாய்ப்பு, நிலைத்தன்மை மற்றும் நடமாட்டம் ஆகியவற்றில் பங்கேற்ற நாடுகள் பங்களித்த பல்வேறு வழிகளை கண்காட்சிகள் ஆராய்கின்றன. பல ஐகானிக் பொருட்கள் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டாலும், சிற்பங்கள், கலைப்பொருட்கள், இசைக்கருவிகள், நினைவுச்சின்னங்கள் மற்றும் ஜவுளிகள் உட்பட 80 க்கும் மேற்பட்ட அசல் பொருட்கள் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமில்லாமல், மே 18 மற்றும் 19 ஆம் தேதிகளில், அலிஃப், டெர்ரா, விமன்ஸ் மற்றும் விஷன் பெவிலியன்கள் மற்றும் கார்டன் இன் தி ஸ்கை உள்ளிட்ட பிற எக்ஸ்போ 2020 துபாய் இடங்களிலும் 50 சதவீத தள்ளுபடியையும் பார்வையாளர்கள் அனுபவிக்கலாம்.
பொதுவாக, தனிப்பட்ட டிக்கெட்டுகளுக்கு ஒரு பெவிலியனுக்கு ஒரு நபருக்கு 50 திர்ஹம்கள் செலவாகும் அல்லது கீழேயுள்ள அனைத்து பெவிலியன்களையும் பார்வையிட அனுமதிக்கும் ஒரு நாள் ‘அட்ராக்ஷன்ஸ் பாஸை’ 120 திர்ஹம்ஸ்க்கும் வாங்கலாம்.
அருங்காட்சியகம் திறக்கும் நேரம்:
தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை (கடைசி நுழைவு மாலை 5:15)
டிக்கெட் விலை
முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு, நீங்கள் அருங்காட்சியகத்திற்குள் நுழைய டிக்கெட் வாங்க வேண்டும். 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் த்ரீ ஸ்டோரீஸ் ஆஃப் நேஷன்ஸ் கண்காட்சிக்கான ஒருங்கிணைந்த டிக்கெட்டை 50 திர்ஹம்ஸில் வாங்கலாம்.
4 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு 40 திர்ஹம். 3 வயது மற்றும் அதற்குக் குறைவானவர்களுக்கும், மாற்றுத் திறநாளிகளுக்கும் நுழைவு கட்டணம் இலவசம். மேலும் இதற்கான டிக்கெட்டுகளை www.expocitydubai.com இல் வாங்கலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel