அமீரக செய்திகள்

அமீரகத்தில் தொழிலாளர்களை மில்லியனர்களாக மாற்றி அழகு பார்த்த தனியார் நிறுவனம்..!! விருது வழங்கி சொகுசு வாழ்க்கையும் பரிசளிப்பு..!!

அமீரகத்தில் கடந்த மே 1 ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஒரு நிறுவனமானது தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் மில்லியனராக இருக்கும் வாய்ப்பை வழங்கி உற்சாகப்படுத்தியுள்ள நிகழ்வானது பலரையும் கவர்ந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா எமிரேட்டை தளமாகக் கொண்டு இயங்கி வரும் ‘World Star Holding’ என்ற நிறுவனத்தில் சிறந்த செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த 16 தொழிலாளர்களுக்கு மே 1 அன்று, ‘கோல்டன் அசீவ்மென்ட் விருது’ மற்றும் வாழ்நாளில் ஒருமுறை மில்லியனர் வாழ்க்கையை அனுபவிக்கும் மற்றொரு சிறந்த வாய்ப்பு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம், அவர்கள் ஃபெராரி மற்றும் பென்ட்லி போன்ற சொகுசு கார்களில் நகரம் முழுவதும் பயணித்ததுடன் எமிரேட்டின் கடற்பகுதியில் தனியார் படகு விருந்துகளில் கலந்து கொண்டு நடனமாடி ஆடம்பர வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்துள்ளனர்.

மேலும், அவர்கள் வழக்கமாக அணியும் உடை போல் அல்லாமல், சொகுசு வாழ்க்கைக்கு பொருத்தமாக கோட்சூட் அணிந்து, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் மற்றும் சிறந்த உணவகங்களில் பிடித்தமான உணவுகள் என உற்சாகமாக அந்த நாளை செலவிட்டுள்ளனர்.

இது குறித்து இந்திய தொழிலாளி ராம்தயாள் என்பவர் கூறுகையில், “நான் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு விருந்தினராக வருவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, இது ஒரு சிறந்த உணர்வு மற்றும் என்னால் அதை வார்த்தைகளால் விளக்க முடியாது. ஒவ்வொரு நாளும், நாங்கள் எங்கள் பணியிடத்திற்குச் செல்லும் போது நூற்றுக்கணக்கான சொகுசு கார்களைப் பார்க்கிறோம். நான் அதில் ஒருமுறை உட்கார முடிந்தது என்பதை மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

சுமார் எட்டு ஆண்டுகளாக World Star Holding நிறுவனத்தில் பணிபுரியும் இவர், பல ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களின் கட்டுமானப் பணிகளில் பங்காற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நாள் எப்படி சென்றது?

முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த தொழிலார்களை கவுரவிப்பதற்காக ஒரு சுருக்கமான விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் அனைவருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, 16 பேரும் ஒரே மாதிரியான நீல நிற கோட் சூட்டை அணிந்து கொண்டு ஃபெராரி, லம்போர்கினி, பென்ட்லி, ஃபோர்டு மஸ்தாங் மற்றும் காடிலாக் போன்ற சொகுசு கார்களில் ஏறி துபாய் முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சொகுசு கார்கள் முதலில் துபாய் மெரினாவில் நிறுத்தப்பட்டு, அங்கு அவர்கள் தனியார் படகு விருந்துகளில் கலந்து கொண்டு, ஆட்டம்பாட்டம் என கேக் வெட்டி கொண்டாடியிருக்கின்றனர். பின்னர் அவர்கள் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இது பற்றி சுமார் 12 ஆண்டுகளாக அதே நிறுவனத்தில் பணிபுரியும் வங்காளதேச தொழிலாளி ஜாஹித் என்பவர் கூறிய போது, “வாழ்க்கையை அனுபவிக்க இதுபோன்ற வாய்ப்புகள் அரிதாகவே கிடைக்கின்றன அல்லது கனவாகவே போய்விடுகின்றது. அவற்றை அனுபவிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பிரகாசமான எதிர்காலம்

‘One-Day Millionaire’ என்று அழைக்கப்படும் இந்த முயற்சி, தொழிலாளர்கள் தங்கள் வாழ்வில் சிறந்து விளங்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று வேர்ல்ட் ஸ்டார் ஹோல்டிங்கின் நிர்வாக இயக்குனர் ஹசீனா நிஷாத் தெரிவித்துள்ளார்.

நிறுவனம் அதன் தொழிலாளர்களுக்கு இதுபோன்ற அனுபவத்தை நடத்துவது இது முதல் முறை அல்ல என்றும், மற்ற ஊழியர்கள் இதற்கு முந்தைய தொழிலாளர் தின கொண்டாட்டங்களில் விருதுகளையும் சிறப்பு பரிசுகளையும் பெற்றிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு கூட, நிறுவனம் தனது ஊழியர்களின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, ஜார்ஜியா பயணத்திற்கான அனைத்து செலவையும் செலுத்தி அவர்களை அழைத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடாந்திர பரிசு ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான பாராட்டுக்கான சைகையாக செயல்பட்டதாகவும், இது ஓய்வெடுக்கவும், சக ஊழியர்களுடன் பிணைக்கவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது என்றும் நிறுவனத்தின் தலைவர் நிஷாத் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த ஆண்டு முதல், நிறுவனம் தங்கள் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்தும் என்று கூறிய ஹுசைன், “எதிர்காலத்தில் தொழிலாளர்களின் குழந்தைகளை சிறந்தவர்களாக மாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம், அதற்கு தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி முக்கியமானது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!