ADVERTISEMENT

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான ‘புதிய நலவாரியத் திட்டம்’..!! நன்மைகள் என்ன? எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

Published: 19 May 2024, 7:43 PM |
Updated: 19 May 2024, 7:44 PM |
Posted By: Menaka

தமிழ்நாட்டைச் சேர்ந்த படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் என பல லட்சம் பேர் வேலைக்காகவும், சொந்த தொழிலுக்காகவும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அவ்வாறு உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியில், பல புதிய முயற்சிகளையும் திட்டங்களையும் தமிழக அரசாங்கத்தின் புலம்பெயர்ந்த தமிழர்கள் நலத் துறையானது (NRT) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதாவது, வெளிநாடுகளில் அல்லது பிற மாநிலங்களில் வசிக்கும் 18 முதல் 55 வயதுக்குட்பட்ட வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக மாநில அரசாங்கம் கல்வி உதவித்தொகை, திருமன உதவித்தொகை, உடல்நல காப்பீட்டு திட்டம் போன்ற பல்வேறு சிறப்பு நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் இதனை பெற விரும்புபவர்கள் https://nrtamils.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதில் பதிவு செய்தவுடன், உங்களுக்கு ஒரு அடையாள அட்டை வழங்கப்படும், இந்த அட்டையை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். பதிவுக் கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், உறுப்பினர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு தற்போது ஒரு சலுகையையும் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக அயலக தமிழர்களுக்கான நலவாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 15, 2024 முதல் ஆகஸ்ட் 15,2024 வரையிலான மூன்று மாத காலங்களுக்குள் பதிவு செய்யும் நபர்களுக்கு ₹200 பதிவுக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வெளிநாட்டில் வசிக்கும் NRT மற்றும் இந்தியாவில் வசிக்கும் NRT என இரண்டு பிரிவுகள் இந்த நலத்திட்டங்களின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

வகை 1: அயலகத் தமிழர் (வெளிநாடு)

இந்திய பாஸ்போர்ட் மற்றும் உரிய ஆவணங்களுடன் வெளிநாட்டில் பணிபுரியும்/படிக்கும் தமிழர்கள் மற்றும் Emigration Clearance பெற்று வெளிநாட்டிற்கு செல்ல உள்ள தமிழர்கள் இப் பிரிவில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்.

வகை 2: அயலகத் தமிழர் (இந்தியா)

இந்தியாவின் பிற மாநிலங்களில் அதாவது தமிழ்நாட்டிற்கு வெளியே ஆறு மாதங்களுக்கு மேல் வசிக்கும் அல்லது பணி புரியும் தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம். ஆனால் மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு இது பொருந்தாது.

தமிழ்நாட்டில் வசிக்கும் தனிநபர் மற்றும் ஆறு மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு தற்காலிகமாக பிற மாநிலங்களுக்கு சென்ற தனி நபர்கள் இந்த அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றிற்கும் மேலாக, வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்பவர்கள், வாரியம் மூலம் தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்கள் மூலம் பயனடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு செய்தவர்களுக்கு கிடைக்கும் நலத்திட்டங்கள்:

தமிழக அரசின் இந்த புதிய நலத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு காப்பீட்டு திட்டம், கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகை வழங்கப்படும்.

>> காப்பீட்டு திட்டம்: நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்திருந்தால் தனிப்பட்ட விபத்து மற்றும் தீவிர நோய்க்கான காப்பீட்டு திட்டங்களை குறைந்த சந்தாக்களில் பெறலாம்.

>> கல்வி உதவித்தொகை: NRT அடையாள அட்டைதாரர் தமிழகத்திற்கு வெளியிலோ அல்லது இந்தியாவிற்கு வெளியிலோ மரணம் அடைந்தால், அவரது குழந்தைகளுக்கு (அதிகபட்சம் இரண்டு பேர்) கல்வி நிலையை பொறுத்து உதவித்தொகை வழங்கப்படும்.

>> திருமண உதவித்தொகை: NRT அட்டைதாரர் தமிழ்நாட்டிற்கு வெளியிலோ அல்லது வெளிநாட்டிலோ உயிரிழக்கும் நிலையில் அவர்களின் குழந்தைகளுக்கு 20,000 ரூபாய் திருமண உதவித்தொகையாக வழங்கப்படும்.

மேலும் இது தொடர்பான கூடுதல் விசாரணைகளுக்கு 24×7 கட்டணமில்லா உதவி மையத்தையும் தமிழக அரசு அமைத்துள்ளது. எனவே, எண்கள் 18003093793 (இந்தியாவிற்குள்); 8069009901 (இந்தியாவுக்கு வெளியே); 8069009900 (missed call) போன்ற எண்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel