கடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே சுற்றுலா செல்லும் ஆர்வமானது முன்னர் இருந்ததைக் காட்டிலும் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என்பது தற்போதைய காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு உலகம் முழுவதிலும் இருந்து பலர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றாலும் குறிப்பிட்ட நாடுகளே மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. சுற்றுலா மட்டுமின்றி வெளிநாட்டவர்கள் வசிப்பதற்கும் வேலை பார்ப்பதற்கும் என எல்லா வகையிலும் பொருந்தக்கூடிய நாடுகள் சில உண்டு.
அவற்றில் ஐக்கிய அரபு அமீரகமானது பலர் விரும்பக்கூடிய நாடாக இருக்கின்றது. இதனால் பலர் அமீரகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக அமீரகத்திற்கு வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை நடப்பு ஆண்டின் முதல் காலாண்டிலேயே 36.5 மில்லியன் பயணிகளை வரவேற்று குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாக பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (GCAA) தெரிவித்துள்ளது. இது 10,723,639 பயணிகளின் வருகைகள், 10,874,232 பயணிகளின் புறப்பாடுகள் மற்றும் 14,944,466 டிரான்ஸிட் பயணிகளை உள்ளடக்கியது என கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 14.7 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது மற்றும் துறையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், விமான சரக்குத் துறை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்தமாக 1.1 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டதாக தரவுகள் வெளியாகியுள்ளன. இதில் 269,526 டன் இறக்குமதிகள், 119,490 டன் ஏற்றுமதிகள் மற்றும் 714,446 டன் போக்குவரத்து சரக்குகள் அடங்கும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 32 சதவிகித வளர்ச்சியைக் குறிக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த காலகட்டத்தில் மொத்த விமான சரக்கு இயக்கத்தில் சுமார் 68% என்றளவில் நாட்டின் தேசிய விமான நிறுவனங்கள் முன்னணியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து GCAA இன் இயக்குனர் ஜெனரல் சைஃப் முகம்மது அல் சுவைதி கூறுகையில், இந்த வெற்றிக்கு மத்திய மற்றும் உள்ளூர் அரசாங்க மட்டங்களில் அதிகாரிகள் மற்றும் அதன் பங்காளிகளுக்கு இடையேயான கூட்டு முயற்சிகளே காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த வளர்ச்சி விகிதங்கள் துறையின் வலிமை, போட்டித்திறன் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் 189 விமானப் போக்குவரத்து ஒப்பந்தங்களால் எளிதாக்கப்பட்ட தேசிய விமான நிறுவனங்களுக்கான புதிய சந்தைகளின் மூலோபாயத் திறப்பு, சர்வதேச கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கு உதவியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel