ஐக்கிய அரபு அமீரகத்தில் தேவையற்ற விற்பனை அழைப்புகள் அடிக்கடி வந்து குடியிருப்பாளர்களை எரிச்சலூட்டுகின்றன. இத்தகைய மார்க்கெட்டிங் அழைப்புகளுக்கு எதிரான விதிமுறைகளை கடுமையாக்க அமீரக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே விரைவில் இது போன்ற தேவையற்ற அழைப்புகளுக்கு அபராதம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து துபாயில் வசிக்கும் ஒரு குடியிருப்பாளர் பேசுகையில், “ஒரு அந்நிய செலாவணி (forex trading) வர்த்தக நபர் என்னை அழைத்து அந்நிய செலாவணி வர்த்தக தளத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்டார். நான் அந்த நேரத்தில் வேலை தேடிக்கொண்டிருந்ததால் முதலீடு செய்ய என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன், அதனுடன் முடிந்து விட்டது என்று நினைத்தேன். ஆனால் அடிக்கடி அழைப்பு வர ஆரம்பித்தது” என்று கூறியுள்ளார்.
தற்பொழுது, அவர் HR குழுவின் தலைவராக பணிபுரிந்து வரும் நிலையில், மீண்டும் மீண்டும் அந்த நபரிடமிருந்து அழைப்பு வருவதாகவும், வேலை கிடைத்ததா, முதலீடு செய்ய ஆர்வமா என்று தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இப்படியான சூழலில், இந்த வார தொடக்கத்தில் நடந்த கூட்டத்தின் போது இது போன்ற அழைப்புகளை ஒழுங்குபடுத்தும் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, டெலிமார்க்கெட்டிங் நடைமுறைகளுக்கு வழிகாட்டுதல்கள் அமைக்கப்படும் மற்றும் நிறுவனங்களுக்கான கடமைகள் நிறுவப்படும் என்றும், அத்துடன் விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் துபாய் ஊடக அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டாட்சி மற்றும் உள்ளூர் அதிகாரிகள் விதிமுறைகளை அமல்படுத்த இணைந்து செயல்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய மார்க்கெட்டிங் அழைப்புகளை எதிர்கொள்ளும் அமீரகக் குடியிருப்பாளர்களுக்கு, அந்த பிஸியான நாளின் நடுவில் எரிச்சலூட்டும் கவனச்சிதறலாக மட்டுமே இந்த அழைப்புகள் இருக்கும். ஆனால், அந்த அழைப்புகளை செய்வதே ஒரு வேலையாக இருந்தால் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை அனுபவித்ததாக இரண்டு வாரங்களுக்குப் பிறகு வேலையை விட்டு வெளியேறிய 27 வயதான வெளிநாட்டவர் மிட்செல் செர்வால்ஸ் மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதாவது, அந்த நிறுவனத்தில், அவர் அழைக்க வேண்டிய எண்களின் பட்டியலும், அவர் என்ன சொல்ல வேண்டும் என்பதற்கான ஸ்கிரிப்டும் வழங்கப்பட்டதாகவும், எத்தனை பேரை முதலீடு செய்ய வைக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் ஊழியர்களின் செயல்திறன் அளவிடப்படுவதாகவும் செர்வால்ஸ் விவரித்துள்ளார்.
10ல் 9 அழைப்புகள் ‘தேவையற்றவை
அமீரகத்தில் உள்ள வடிவமைப்பு நிறுவனத்தில் பணிபுரியும் மற்றொரு குடியிருப்பாளர், “ஒருவேளை ஒரு வேலை வாய்ப்பைப் பற்றி அழைப்பாகவோ, சக ஊழியரின் அழைப்பாகவோ இருக்கலாம் என்பதால் எனக்கு வரும் எந்த அழைப்புகளையும் தவறவிடமாட்டேன். ஆனால், அடிக்கடி வரும் மார்க்கெட்டிங் அழைப்புகள் மிகவும் ஏமாற்றமளிக்கிறது” என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசிய போது, அந்நியர்களிடமிருந்து வரும் 10 அழைப்புகளில் ஒன்பது இந்த அந்நிய செலாவணி வர்த்தகர்கள், வங்கிகள், விற்பனையாளர்களிடமிருந்து வருவதாகவும், பிஸியான நாளின் நடுவில் இருக்கும்போது இந்த அழைப்புகள் ஒரு பெரிய பிரச்சனையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பிரச்சினைக்கான தீர்வு:
தற்சமயம், நாட்டில் இத்தகைய தேவையற்ற அழைப்புகளை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டம் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், குடியிருப்பாளர்கள் இந்த அழைப்பாளர்களின் ரேடார்களில் இருந்து தப்பிக்க வழி உள்ளதாகக் கூறப்படுகிறது.
UAE அதிகாரிகள் 2022 ஆம் ஆண்டில், அழைப்பை எடுக்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க உதவும் வகையில், காஷிஃப் முன்முயற்சியை (Kashif initiative) அறிமுகப்படுத்தினர். இது தானாகவே நிறுவனங்களை அழைப்பாளர் ஐடி (caller ID) சேவைகளில் பதிவு செய்வதால், தெரியாத அழைப்பாளர் பாப் அப் செய்யும் போது, அந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட நிறுவனம் தொலைபேசியில் தோன்றும்.
இது தவிர, எண்களைத் தடுப்பது வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் டெலிமார்க்கெட்டிங் மற்றும் விளம்பர அழைப்புகளைப் பெற விரும்பவில்லை என்பதைக் குறிக்கும் UAE இன் ‘Do Not Call Registry (DNCR)’ இல் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel