ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள்… குடியிருப்பாளர்கள் உணர்ந்ததாக தகவல்..!!

Published: 29 May 2024, 9:38 AM |
Updated: 29 May 2024, 9:38 AM |
Posted By: Menaka

அமீரகத்தில் இந்த மாத தொடக்கத்தில் லேசான நிலநடுக்கம் பதிவாகியிருந்த நிலையில் தற்பொழுது இன்றும் (புதன்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அமீரகத்திற்கு அருகில் இருக்கும் ஓமான் கடலில் இன்று புதன்கிழமை அடுத்தடுத்து சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மக்கள் இன்று அதிகாலை லேசான நடுக்கங்களை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அமீரகத்தின் ராஸ் அல் கைமா கடற்கரை அருகே நள்ளிரவு 12.12 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அதிகாலை 1.53 மணிக்கு 2.8 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. அடுத்தடுத்து பதிவான இரண்டு நிலநடுக்கங்களும் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக NCM தெரிவித்துள்ளது.

இருப்பினும், திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ஐக்கிய அரபு அமீரகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த மாத தொடக்கத்தில் மே 17 அன்று 1.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போது, ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் லேசான நடுக்கத்தை உணர்ந்தனர்.

ADVERTISEMENT

அதே போல் இதற்கு முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் கோர் ஃபக்கனில் வசிக்கும் மக்களும் நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்திருந்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட, ஃபுஜைரா மற்றும் ராஸ் அல் கைமா எல்லையில் உள்ள மசாஃபியில் 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

அமீரகத்தில் அடிக்கடி இந்த நிலநடுக்கங்கள் ஏற்படும் போதிலும் இந்த நிலநடுக்கங்களைப் பற்றி குடியிருப்பாளர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் இவை பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் வல்லுநர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel