துபாயில் குடும்பம் அல்லது நண்பர்களுடன் பட்ஜெட் விலையில் சுற்றிப்பார்க்க சரியான இடத்தைத் தேடுகிறீர்களா? அப்படியானால், நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய பாரம்பரிய அருங்காட்சியகமான அல் ஷிந்தகா அருங்காட்சியகத்திற்கு செல்லலாம். ஏனெனில் இந்த அருங்காட்சியகம் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் பார்வையாளர்களுக்கு இலவச நுழைவை அறிவித்துள்ளது.
அதன்படி அருங்காட்சியகத்திற்கு இலவச நுழைவைப் பெற, நீங்கள் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) கடல் போக்குவரத்து நெட்வொர்க்கின் (அப்ரா, துபாய் ஃபெர்ரி அல்லது வாட்டர் டாக்ஸி) ஏதேனும் ஒன்றில் பயணம் செய்திருக்க வேண்டும்.
குறிப்பாக, கடல் போக்குவரத்து வசதிகளில் பயணம் செய்வதற்கு வாங்கிய டிக்கெட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில், அருங்காட்சியகத்தில் இலவசமாக நுழைவதற்கு முன்பு இந்த ரசீதை விசிட்டர் சென்டரில் பார்வையாளர்கள் காட்டினால் மட்டுமே இலவச நுழைவிற்கு அனுமதி வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், அருங்காட்சியகத்திற்குள் நுழைவதற்கான ஒரு டிக்கெட்டை வாங்கினால் மட்டுமே, இரண்டாவது டிக்கெட்டுக்கு இந்த இலவச நுழைவு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திறந்திருக்கும் நேரம்:
தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அருங்காட்சியகம் திறந்திருக்கும் (கடைசி நுழைவு இரவு 7 மணிக்கு).
5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இலவச நுழைவு வழங்கப்படுகிறது.
எப்படி செல்வது?
* அருகிலுள்ள கடல் போக்குவரத்து நிலையம் – அல் குபைபா கடல் போக்குவரத்து நிலையத்தில் இறங்கி இரண்டு நிமிட நடைப்பயணம் மேற்கொண்டால் அருங்காட்சியகத்தை அடையலாம்.
* அருகில் உள்ள துபாய் மெட்ரோ நிலையம் – க்ரீன் லைனில் அல் குபைபா மெட்ரோ நிலையம், அங்கிருந்து அருங்காட்சியகம் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.
* அருகில் உள்ள பேருந்து நிலையம் – அல் குபைபா பஸ் நிலையம்.
* கார் – நீங்கள் D92 சாலை (இன்ஃபினிட்டி பிரிட்ஜ் சாலை) வழியாக அருங்காட்சியகத்தை அணுகலாம்.
அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்கள்:
அல் ஷிந்தகா அருங்காட்சியகம் துபாய் மற்றும் அமீரகத்தின் வளர்ச்சியைக் காண்பிக்கும் 80 வரலாற்று வீடுகளை உள்ளடக்கிய 22 அரங்குகளைக் கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த அருங்காட்சியகம் 19 ஆம் நூற்றாண்டு முதல் 1970 கள் வரை இன்றைய நவீன பெருநகரமாக மாறுவதற்கு முன்பு துபாயின் பாரம்பரிய வாழ்க்கை முறையை பார்வையாளர்களுக்குக் காண்பிக்கிறது.
கூடுதலாக, சிறப்பு காட்சிகள், வசீகரிக்கும் வீடியோக்கள் மற்றும் உண்மையான கலைப்பொருட்கள் மூலம், அமீரக குடிமக்களின் கடல்சார் வர்த்தகம் அவர்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு மாற்றியது என்பதைப் பற்றிய அறிவையும் பார்வையாளர்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel