துபாய் மற்றும் ஷார்ஜா போன்ற எமிரேட்கள் ஈத் அல் அதா விடுமுறையை முன்னிட்டு இலவச பார்க்கிங் வசதியை அறிவித்துள்ள நிலையில், அமீரக தலைநகர் அபுதாபியிலும் இன்று (ஜூன் 15 சனிக்கிழமை) முதல் ஜூன் 18 செவ்வாய்க்கிழமை வரை குடியிருப்பாளர்கள் பொது பார்க்கிங்கை இலவசமாக அணுகலாம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதேசமயம், நீண்ட வார இறுதியில் வாகன ஓட்டிகள் டார்ப் டோல் கேட்களை கட்டணமின்றி இலவசமாக கடந்து செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் 19 புதன்கிழமையன்று அபுதாபியில் உள்ள பார்க்கிங் மண்டலங்களில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அபுதாபியின் முனிசிபாலிட்டிகள் மற்றும் போக்குவரத்துத் துறை (DMT) தெரிவித்துள்ளது.
அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாயைப் போலவே அஜ்மான் எமிரேட்டிலும் ஜூன் 16 முதல் 18 வரை இலவச பார்க்கிங் அறிவிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி மற்றும் திட்டமிடல் துறை தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பொது மற்றும் தனியார் துறைகளுக்கு, ஈத் அல் அதாவைக் கொண்டாட ஜூன் 15 சனிக்கிழமை முதல் ஜூன் 18 செவ்வாய் வரை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஷார்ஜாவில் உள்ள பொதுத்துறை ஊழியர்கள் 4 நாள் வேலை வாரத்தை முன்னிட்டு 5 நாள் விடுமுறையை அனுபவிக்க உள்ளனர். அதாவது அவர்களுக்கு ஏற்கெனவே வார விடுமுறை நாட்களாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு இருக்கும் நிலையில் தற்பொழுது 5 நாட்கள் விடுமுறை ஷார்ஜாவின் அரசு ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel