ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில், வாகன ஓட்டியின் தவறான நடத்தையால் ஏற்பட்ட ஒரு பெரிய போக்குவரத்து விபத்து பதிவாகியுள்ளது. பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் வீடியோ காட்சிகளை, வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக அபுதாபி காவல்துறை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அபுதாபி காவல்துறை பகிர்ந்துள்ள இந்த 31 வினாடி வீடியோ கிளிப்பில், கவனத்தைச் சிதறடித்து காரை வேகமாக இயக்கிய ஒரு பொருப்பற்ற ஓட்டுநர், அவருக்கும் மற்ற காருக்கும் இடையில் போதிய தூரம் இல்லை என்பதைப் பொருட்படுத்தாமல், சாலையின் இடது பாதை வழியாக அந்த காரை முந்திச் செல்ல அதிவேகத்தில் செல்வதைக் காணமுடிகிறது.
பின்னர் சில நொடிகளில், அந்த கார் முன்னே சென்ற கார் மீது மோதி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், சாலைத் தடுப்புச் சுவரில் மோதி கிட்டத்தட்ட கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளாவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் சாலைத் தடுப்புச் சுவரில் மோதியதில் காரின் முன்பகுதி சரமாரியாக சேதமடைந்துள்ளதையும் வீடியோவில் காணமுடிகிறது.
#أخبارنا | بثت #شرطة_أبوظبي بالتعاون مع مركز التحكم والمتابعة وضمن مبادرة “لكم التعليق” فيديو لحادث بسبب الانشغال بغير الطريق أثناء توقف حركة السير في الطريق وعدم ترك مسافة أمان كافية
التفاصيل:https://t.co/2UcJQFizrZ#لكم_التعليق#الانشغال_بغير_الطريق pic.twitter.com/Lm8e4LTbTl
— شرطة أبوظبي (@ADPoliceHQ) June 11, 2024
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, வாகனம் ஓட்டும் போது கவனம் சிதறாமல் இருக்கவும், வாகனம் ஓட்டும் போது சாலையில் கவனம் செலுத்தவும், வாகனத்தில் இருக்கும் ஏதேனும் கோளாறுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய முழு கவனம் செலுத்துவதை உறுதிசெய்யவும் வாகன ஓட்டிகளை காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், இத்தகைய சூழ்நிலைகளில் கவனத்தை புறக்கணிப்பது போக்குவரத்து விபத்துக்களுக்கு வழிவகுக்கும், பெரும்பாலும் உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டிய அதிகாரிகள், அமீரகத்தில் கவனத்தை சிதறடித்து, கவனக்குறைவாக வாகனம் ஓட்டினால் அபராதம் 800 திர்ஹம் அபராதம் மற்றும் 4 ப்ளாக் பாயிண்ட்ஸ் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமீரகத்தை பொருத்தவரையிலும் சாலைகளில் நடக்கும் பெரும்பாலான சாலை விபத்துக்கள் போக்குவரத்து விதிமீறல்களால் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகளின் தவறான நடத்தை காரணமாக போக்குவரத்து இறப்பு 3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகத்தால் (MOI) சமீபத்தில் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான சாலைப் பாதுகாப்புப் புள்ளிவிவரங்களின் படி, கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் 352 பேர் மரணித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel