ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் ஈத் அல் அதா விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், தற்போது விமான டிக்கெட்டுகளின் விலையானது வழக்கமான கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஈத் அல் அதா விடுமுறைக்கு பயணம் செய்ய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தவறிய வெளிநாட்டவர்கள் பலரும் தற்போதைய டிக்கெட் விலையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமீரகத்தில் பணிபுரியும் இந்திய வெளிநாட்டவர் ஒருவர், ஒரு மாதத்திற்கு முன்பு தனது குடும்பத்தினர் பெங்களூர் செல்ல பிசினஸ் க்ளாஸில் ஒரு நபருக்கு 2,700 திர்ஹம்ஸ் வீதம் கட்டணம் செலுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்து விட்டு, அந்த தேதிகளில் அவரது அலுவலகத்தில் மீட்டிங் திட்டமிடப்பட்டிருந்ததால் தனது பின்னர் புக் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.
அதன்பிறகு, அவரது வாடிக்கையாளர்கள் மீட்டிங்கை ரத்து செய்வதாகக் கூறிய நிலையில், தனது குடும்பத்துடன் தானும் ஒன்றாக பெங்களூருக்கு பயணம் செய்யலாம் என எண்ணி விமான டிக்கெட்டை வாங்க முயற்சித்த போது, டிக்கெட்டின் விலை மூன்று மடங்கு உயர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
அதாவது, ஒரு நபருக்கு 8,500 திர்ஹம் டிக்கெட் கட்டணம் உயர்ந்திருந்ததால் தனது டிக்கெட்டை முன்பே பதிவு செய்யாமல் இருந்ததற்கு அவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இதே போன்று உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு வெளிநாட்டவர் 450 திர்ஹம்களுக்கு ஒரு வழி டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்த நிலையில், துபாயில் உள்ள தனது உறவினர்கள் ஈத் விடுமுறைக்கு தங்குவார்கள் என்று நினைத்ததால் அவரது டிக்கெட்டை ரத்து செய்திருக்கிறார்.
ஆனால், இப்போது உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவரது உறவினர்கள் அனைவரும் ஈத் பண்டிகையைக் கொண்டாட அவர்களின் சொந்த ஊருக்கு வருவதால் இவரும் பயணிக்க விரும்பியுள்ளார். இதற்காக விமான டிக்கெட்டை சரிபாரத்தபோது கட்டணம் மூன்று மடங்காக இருந்ததை கண்டு அதிரச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
டிக்கெட் விலைகளின் எழுச்சிக்கு காரணம் என்ன?
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது, ஈத் அல் அதா விடுமுறையும் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக வருகிறது. எனவே, விமானக் கட்டணங்கள் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக பயண நிபுணர்கள் தெரிவித்தனர்.
அமீரகத்தில் உள்ள பல குடும்பங்கள் முன்கூட்டியே மற்றும் நீண்ட காலத்திற்கு பயணம் செய்ய விரும்புகின்றன என்று குறிப்பிட்ட பயண நிபுணர்கள், ஈத் அல் அதா இடைவேளையின் போது பயணம் செய்யத் திட்டமிட்ட பல குடியிருப்பாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாகவும் கூறுகின்றனர்.
பயண நிபுணர்களின் கூற்றுப்படி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் துபாயில் இருந்து மணிலாவிற்கு டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் 1,500 முதல் 2,000 திர்ஹம் வரை கட்டணம் செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் இப்போது, அமீரகத்தில் இருந்து மணிலாவிற்கான விலை 2,500 முதல் தொடங்குகிறது. மேலும் இது 5,000 திர்ஹம் வரை உயரும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், கோடைகாலப் பயணங்கள் உச்சத்தை எட்டியிருப்பதால், ஈத் முடிந்த பிறகும் விமானக் கட்டணம் அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், ஈத் அல் அதா பண்டிகை மற்றும் கோடைவிடுமுறைக்கு மத்தியில் அமீரகத்தில் இருந்து விமான டிக்கெட்டுகளின் விலை அதிகமாக இருந்தாலும், அமீரகத்திற்கான விமான டிக்கெட்டுகள் மலிவு விலையில் கிடைக்கலாம் என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel