ADVERTISEMENT

துபாயில் புதிய பாலம் போக்குவரத்திற்காக திறப்பு.. பயண நேரத்தை 21ல் இருந்து 7 நிமிடங்களாக குறைக்கும் எனத் தகவல்..!!

Published: 11 Jun 2024, 9:56 AM |
Updated: 11 Jun 2024, 9:56 AM |
Posted By: Menaka

துபாயின் பிரதான சாலையான ஷேக் முகமது பின் சையத் சாலையில் (E311) இருந்து ஜுமேரா கோல்ஃப் எஸ்டேட் மற்றும் துபாய் ப்ரொடக்ஷன் சிட்டிக்கு செல்லும் சர்வீஸ் சாலைக்கு போக்குவரத்தை பிரிக்கக் கூடிய புதிய பாலம் நேற்று முன்தினம் ஜூன் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒரு மணி நேரத்திற்கு 3,200 வாகனங்கள் வரை அனுமதிக்கும் திறன் கொண்ட இந்த இருவழிப் பாலமானது, கார்ன் அல் சப்கா மற்றும் ஷேக் முகமது பின் சையத் (E311) சாலை இன்டர்செக்சனை மேம்படுத்த துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மேற்கொண்ட திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டுள்ளது.

மேலும், துபாயில் உள்ள ஷேக் சையத் சாலை, ஷேக் முகமது பின் சையத் சாலை, ஃபர்ஸ்ட் அல் கைல் சாலை மற்றும் அல் அசயேல் சாலைகளுக்கு இடையே போக்குவரத்து ஓட்டத்தை எளிதாக்க நான்கு பாலங்கள் கட்டும் போக்குவரத்து திட்டம் கிட்டத்தட்ட முடிக்கப்பட்டுள்ளது. இது ஷேக் சையத் மற்றும் ஷேக் முகமது பின் சையத் சாலைகளுக்கு இடையே மிக முக்கியமான இணைப்பை ஏற்படுத்தும் சாலை திட்டமாகும்.

ADVERTISEMENT

Photo: X/Dubai Media Office

இத்திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டதும், கார்ன் அல் சப்கா ஸ்ட்ரீட்டில் இருந்து ஷேக் முகமது பின் சையத் சாலைக்கு அல் குசைஸ் மற்றும் தேராவை நோக்கி பயணிக்கும் குடியிருப்பாளர்களின் பயண நேரம் 20 நிமிடங்களில் இருந்து 12 ஆக குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், இது ஷேக் முகமது பின் சையத் சாலையில் இருந்து ஜெபல் அலி போர்ட்டின் திசையில் அல் யாலேயஸ் ஸ்ட்ரீட்டை நோக்கி பயணிக்கும் வாகன ஓட்டிகளின் பயண நேரத்தை 70 சதவீதம் வரை அதாவது 21 நிமிடங்களில் இருந்து 7 ஆகக் குறைக்கும் என்றும் RTAவின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர் இயக்குனர் ஜெனரல் மற்றும் மேட்டர் அல் டேயர் கூறியுள்ளார்.

Photo: X/Dubai Media Office

மற்ற மூன்று பாலங்கள்

RTAவின் படி, கார்ன் அல் சப்கா ஸ்ட்ரீட் மற்றும் அல் அசயேல் ஸ்ட்ரீட் சந்திப்பில் உள்ள இருவழிப் பாலம் இரு திசைகளிலும் மணிக்கு 8,000 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது. இது ஷேக் சையத் மற்றும் ஷேக் முகமது பின் சையத் சாலைகளுக்கு இடையே போக்குவரத்தை எளிதாக்கும்.

மற்றொரு இருவழிப் பாலம் கார்ன் அல் சப்கா ஸ்ட்ரீட்டிலிருந்து கிழக்கே ஷேக் முகமது பின் சையத் ஸ்ட்ரீட்க்கும், வடக்கே அல் குசைஸ் மற்றும் தேராவுக்கும் போக்குவரத்துக்கு சேவை செய்யும். இந்த பாலம் ஒரு மணி நேரத்திற்கு 3,200 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது.

மூன்றாவது இருவழிப் பாலமானது, ஷேக் முகமது பின் சையத் சாலை வாகனங்கள் வடக்கே அல் யாலேயஸ் ஸ்ட்ரீட்டிலிருந்து ஜெபல் அலி போர்ட்டை நோக்கிச் செல்லும் குறுக்கீட்டை நீக்கி போக்குவரத்து ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு 3,200 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel