அமீரகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் ஈத் அல் அத்ஹாவிற்கான விடுமுறை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த விடுமுறையை அனுபவிக்க அமீரகத்தில் வசிக்கும் பலரும் தங்களின் சொந்த நாட்டிற்கும் சுற்றுலாவிற்கும் வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி உள்ளனர். ஈத் அல் அதா விடுமுறை, அடுத்ததாக வரவுள்ள கோடை விடுமுறை போன்ற காரணங்களால் வரவிருக்கும் விடுமுறை நாட்களில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என கூறப்படுகின்றது.
எனவே அதிகளவு பயணிகள் விமான நிலையத்தில் பயணம் செய்ய காத்திருக்கும் நிலையில் துபாய் சர்வதேச விமான நிலையமானது (DXB) பீக் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய இந்த சமயங்களில் பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த காலங்களில் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று DXB ஆப்பரேட்டர் தெரிவித்துள்ளது. எனவே, பயணிகள் தங்கள் வீட்டிலேயே குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் விடைபெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுவாக, பல குடியிருப்பாளர்கள் தங்கள் உறவினர்களை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு, தங்கள் செக்-இன் செயல்முறைகளை முடிக்கும் வரை டெர்மினல்களில் காத்திருந்து வழியனுப்பி வைப்பது வழக்கம். ஆனால், விடுமுறை நாட்களாக இருப்பதையொட்டி, விமான நிலையத்தில் பயணிகளின் போக்குவரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இத்தகைய பீக் ஹவர்ஸில் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையாக DXB இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், விமான நிலையத்தில் டெர்மினல்கள் 1 மற்றும் 3 ஆகிய இரண்டிலும் உள்ள அரைவல் பகுதியின் முன்தளங்களுக்கான அணுகல் பொதுப் போக்குவரத்து மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விமான நிலைய வாகனங்களுக்கு மட்டுமே என்பதையும் DXB கோடைகால பயண நெரிசலுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட ஒரு ஆலோசனையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் இஸ்லாமிய பண்டிகையான ஈத் அல் அதாவைக் கொண்டாட வருகிற ஜூன் 15ஆம் தேதி முதல் 18 வரை நான்கு நாட்களுக்கு விடுமுறையைப் பெறுவார்கள். அதையடுத்து, ஓரிரு வாரங்களில் இரண்டு மாத கோடை விடுமுறைக்கு பள்ளிகள் மூடப்படும். ஆகையால், சராசரியாக தினசரி 264,000 பயணிகள் போக்குவரத்துடன் ஜூன் 12 முதல் 25 வரை 3.7 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை வரவேற்க உள்ளதாக DXB தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஜூன் 22 அன்று பயணிகளின் எண்ணிக்கை 287,000 ஐத் தாண்டும் என்றும், அன்றைய தினம் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக DXB கூறியுள்ளது.
பயணிகளுக்கான சில குறிப்புகள்:
- சிட்டி செக்-இன் விருப்பங்கள் உட்பட, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் ஹோம் செக்-இன் மற்றும் சுய-செக்-இன் சேவை போன்ற வசதிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பிற விமான நிறுவனங்களில் பயணிக்கவிருக்கும் பயணிகள், தங்கள் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்னதாகவே DXB-க்கு வருவதை இலக்காகக் கொள்ள வேண்டும். நேரத்தை மிச்சப்படுத்த ஆன்லைன் செக்-இன் சேவையைப் பயன்படுத்தவும்.
- உங்கள் விமானத்தின் லக்கேஜ் அலவன்ஸ் மற்றும் பேக்கிங் விதிமுறைகளை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். முன்கூட்டியே சரிபார்த்து கடைசி நிமிட பதட்டங்களைத் தவிர்க்கவும்.
- தயார் நிலையில் இருப்பதன் மூலம் செக்யூரிட்டி ஸ்கிரீனிங்கில் நேரத்தைச் சேமிக்கவும். கைகடிகாரம், நகைகள், மொபைல் போன், நாணயங்கள், பெல்ட் போன்ற உலோகப் பொருட்களை கைகளில் எடுத்துச் செல்லும் பைகளில் வைக்கவும் மற்றும் லிக்யூட் (liquid), ஏரோசல்கள் (aerosols) மற்றும் ஜெல்களை எடுத்துச் செல்வதற்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.
- 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு செயல்முறையை விரைவுபடுத்தலாம்.
- நீங்கள் சேருமிடத்திற்கான சமீபத்திய பயண விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றவும்
- தேவையான அனைத்து ஆவணங்களும் தயாராக இருப்பதை உறுதி செய்யவும். விமான நிலையத்தில் தேவையில்லாத மன அழுத்தத்தை தவிர்க்கவும் உங்கள் பயணத்தை சீரமைக்கவும், உங்கள் பயண ஆவணங்களை முன்கூட்டியே ஒழுங்கமைத்து, உங்கள் லக்கேஜ்களை வீட்டிலேயே எடைபோடுங்கள்.
- சாலை நெரிசலை தவிர்க்க, துபாய் மெட்ரோவைப் பயன்படுத்தவும்
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel