துபாயின் அல் கூஸில் உள்ள ஃபர்ஸ்ட் அல் கைல் ஸ்ட்ரீட்டில் பேருந்துகள் செல்வதற்கென புதிதாக பிரத்யேக பாதை சேர்க்கப்பட்டுள்ளது, பேருந்துகளைத் தவிர தவறாக அதைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு 600 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அல் கூஸ் பஸ் நிலையத்தில் தொடங்கும் இந்த பாதை ஜபீல் நோக்கி செல்லும் பவுலிங் சென்டர் வரை ஒரு திசையில் மட்டுமே உள்ளது. இருப்பினும், காலித் பின் அல் வலீத் சாலை, நைஃப் ஸ்ட்ரீட் மற்றும் அல் குபைபா சாலையில் காணப்படும் தனித்துவமான பிரகாசமான சிவப்பு அடையாளங்கள் மற்றும் மஞ்சள் நிற கோடுகள் இந்த பாதையில் இல்லை.
ஆனால், அல் கைல் சாலையை நோக்கி லத்தீஃபா பின்த் ஹம்தான் ஸ்ட்ரீட்டுக்கு வலதுபுறம் திரும்பும் வாகன ஓட்டிகளுக்கு வழிவிடும் வகையில், ஃபர்ஸ்ட் அல் கைல் ஸ்ட்ரீட்டில் உள்ள பேருந்து பாதை இந்த மஞ்சள் கோடுகளைக் (broken yellow line) கொண்டுள்ளது.
இது குறித்து சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) செவ்வாயன்று வெளியிட்ட செய்தியில் அல் கூஸில் உள்ள ஃபர்ஸ்ட் அல் கைல் ஸ்ட்ரீட் வழியாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த பேருந்து பாதை தற்காலிகமானது என்றும், இந்த பிரத்யேக பேருந்து பாதையைப் பயன்படுத்துவதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கான ஆய்வு நடந்து வருகிறது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 16 அன்று துபாயில் பெய்த கனமழை பாதிப்பைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதால் மெட்ரோ நிலையங்களுக்கு இடையில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு செல்வதற்காக அப்போது இந்த பேருந்து பாதைகள் உருவாக்கப்பட்டன என்றும் RTA கூறியுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம், நகரின் ஆறு முக்கிய தெருக்களில் 13.1 கிமீ நீளத்திற்கு பிரத்யேக பேருந்து மற்றும் டாக்ஸி பாதைகளை அமைக்கும் திட்டத்தை RTA அறிவித்தது, இது துபாயின் பிரத்யேக பேருந்து பாதைகளின் நெட்வொர்க்கை 20.1 கிமீ ஆக விரிவுபடுத்தியது.
ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா, டிசம்பர் 2, அல் சத்வா, அல் நஹ்தா, உமர் பின் அல் கத்தாப் மற்றும் நைஃப் தெருக்களில் புதிய பேருந்து பாதைகளுடன், சில வழித்தடங்களில் பயண நேரத்தை ஏறக்குறைய 60 சதவீதம் குறைப்பதே இதன் நோக்கமாக இருந்தது. இவ்வாறு பேருந்து மற்றும் டாக்சி பாதைகளை விரிவுபடுத்துவது சில சாலைகளில் பொது போக்குவரத்து பயன்பாட்டை 30 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக RTA குறிப்பிட்டுள்ளது.
பாதை விதிகள்
தொடர்ச்சியான மஞ்சள் கோடு என்றால் வாகன ஓட்டிகள் கடந்து செல்லக்கூடாது. அதாவது வாகன ஓட்டி இந்த கோட்டின் இடது அல்லது வலது பக்கமாக ஓட்டக்கூடாது. அதுவே விட்டு விட்டு வரும் மஞ்சள் கோடு என்றால், ஒரு ஓட்டுநர் பாதையை மாற்ற அல்லது மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல இதைக் கடக்கலாம்.
பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரித்தல்:
துபாயில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக பேருந்து பாதைகள் எமிரேட்டில் பயணிகளிடையே பொது பேருந்து போக்குவரத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்று RoadSafetyUAE இன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் தாமஸ் எடெல்மேன் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த பாதைகள் பயண நேரத்தைக் குறைப்பது மட்டுமின்றி, பேருந்துகள் போக்குவரத்தில் சிக்கிக் கொள்ளாமல் கால அட்டவணையைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் என்று அவர் மேலும் கூறியுள்ளார். மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், புதிய பாதைகள் அதிகளவிலான பயணிகள் பேருந்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் என்றும், இதன் விளைவு இது சாலைகளில் குறைவான வாகனங்கள் செல்லும் என்பதால் போக்குவரத்து நெரிசல்கள், மாசுபாடு மற்றும் சில வாகன ஓட்டிகளின் ஒழுங்கற்ற நடத்தை கணிசமாகக் குறையும் என்றும் எடெல்மேன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel