ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டிற்கான கோடைகாலம் ஆரம்பிப்பதை முன்னிட்டு வெயிலின் தாக்கம் தற்பொழுது அதிகமாகவே இருக்கின்றது. இந்த நிலையில், வரும் ஜூன் 15 முதல் மதிய வேலைக்கான தடை அமலுக்கு வரவிருக்கின்றது. அதாவது ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் கடுமையான கோடைக்கால வெப்பத்தில் நேரடியாக சூரிய ஒளியில் வேலை செய்யும் ஊழியர்களைப் பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மதியம் 12.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கட்டாய மதிய இடைவேளை அறிவித்துள்ளது. இது ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை ஒவ்வொரு வருடமும் அமல்படுத்தப்படும்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் டெலிவரி ரைடர்களுக்காக 6,000 க்கும் மேற்பட்ட ஓய்வு நிலையங்கள் வழங்கப்படும் என்று அமீரகத்தின் மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், அரசு நிறுவனங்களுக்கும் தனியார் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையங்கள் அமைந்துள்ள இடங்களை டெலிவரி ரைடர்கள் மேப் மூலம் அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, டெலிவரி ரைடர்கள் அவர்களின் மதிய இடைவேளைகளிலும் ஆங்காங்கே அமைக்கப்படும் இந்த ஓய்வு நிலையங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியானது டெலிவரி ரைடர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குவதற்கும் அமைச்சகம் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். கடந்த ஆண்டும் இதே போல் ஓய்வு நிலையங்களை அமீரக அரசு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த முயற்சியில் பங்கேற்றுள்ள அனைத்து தனியார் நிறுவனங்களையும் பாராட்டிய ஆணையம், “டெலிவரி சேவைகள் ஒரு முக்கிய லாஜிஸ்டிக் துறையாகும், இது தனித்துவமானது. டெலிவரி ஊழியர்கள் ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வதில்லை. மதிய இடைவேளை அமலில் இருக்கும் போது அதன் ஊழியர்கள் தங்களின் பணி இயல்புகள் காரணமாக சரியான நேரத்தில் வழங்க வேண்டிய பொருட்கள் எந்த நேரத்திலும் கொண்டு செல்லப்படுகின்றன. எனவே இவர்கள் எளிதில் ஓய்வு நிலையங்களை அணுகும் பொருட்டு பல இடங்களில் அமைக்கப்படவுள்ளன” என்று தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் அமலுக்கு வரவிருக்கும் மதிய நேர இடைவேளையின் போது, முதலாளிகள் நேரடி சூரிய ஒளியில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கும் பாராசோல்கள் மற்றும் நிழலான பகுதிகள், அத்துடன் போதுமான குளிரூட்டும் சாதனங்கள் மற்றும் போதுமான குளிர்ந்த குடிநீரை வழங்க வேண்டும் என்றும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel