துபாயின் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் துபாயின் தனியார் கல்வித் துறையில் சிறந்த பங்களிப்பைச் செய்த கல்வியாளர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படும் என்று X தளத்தில் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் X தளத்தில் வெளியிட்ட பதிவில், “உலக ஆசிரியர் தினத்தன்று, துபாயின் தனியார் கல்வித் துறையில் சிறந்த பங்களிப்பைச் செய்யும் கல்வியாளர்களுக்கு கோல்டன் விசா வழங்குவதற்கான உத்தரவுகளை நாங்கள் வழங்குகிறோம். இளைய மாணவர்களின் மனதை நல்வழிப்படுத்தி வளர்ப்பதிலும், நாளைய தலைவர்களை உருவாக்கும் மதிப்புகளை விதைப்பதிலும் உங்கள் முயற்சிகளை பாராட்டுகிறோம். துபாயின் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் மற்றும் கல்வி உத்தி E33 இன் தொலைநோக்கு இலக்குகளை அடைவதிலும் நீங்கள் முக்கியமான பங்குதாரர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹம்தான் அவர்களின் அறிவிப்பின் படி, குழந்தைபருவ மையங்கள், தனியார் பள்ளிகள் மற்றும் சர்வதேச உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் சிறந்த கல்வியாளர்களுக்கு துபாயில் கோல்டன் விசா வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த அங்கீகாரம் அவர்களின் கல்வித் திறமை, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான பங்களிப்புகள், கல்விச் சமூகத்தின் நேர்மறையான கருத்துகள் மற்றும் மாணவர்கள் சிறந்த கல்வி முடிவுகளை அடைய உதவுவதில் அவர்களின் முயற்சிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்புத் தகுதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.
இந்த புதிய முயற்சியின் மூலம், துபாய் திறமையான கல்வியாளர்களை அமீரகத்திற்கு ஈர்ப்பதுடன் நகரத்தில் கல்விக்கான பிரகாசமான எதிர்காலத்திற்கு பங்களிக்க அவர்களை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது. இது அடுத்த தசாப்தத்திற்கான ‘Dubai Education Strategy’ உடன் ஒத்துப்போகிறது மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிப்பதில் ஆர்வமுள்ள விதிவிலக்கான ஆசிரியர்களைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 5, சனிக்கிழமையன்று உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது அவர்கள், நாட்டில் கல்வியாளர்கள் ஆற்றும் பணியைப் பாராட்டியதுடன், தேசத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவைக்கும் நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக, பிப்ரவரி 28 ஆம் தேதி கல்விக்கான எமிராட்டி தினமாக கொண்டாடப்படும் என்று ஷேக் முகமது அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel