ADVERTISEMENT

துபாயில் புதிய போக்குவரத்து சட்டம்: இனி இந்த 14 போக்குவரத்து குற்றங்களுக்கு 30 நாட்கள் வரை வாகனங்கள் பறிமுதல்…

Published: 23 Oct 2024, 8:38 PM |
Updated: 23 Oct 2024, 8:38 PM |
Posted By: Menaka

துபாயில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக போக்குவரத்து சட்டம் கடுமையாக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இப்போது வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துதல், டெயில்கேட் செய்தல் மற்றும் திடீர் திசைதிருப்பல் போன்ற போக்குவரத்து குற்றங்களுக்கு 30 நாட்கள் வரை வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று துபாய் காவல்துறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் ஃபெடரல் போக்குவரத்து சட்டம் இந்த குற்றங்களுக்கு 400 முதல் 1,000 திர்ஹம்ஸ் வரை அபராதமும், நான்கு பிளாக் பாயிண்ட்களும் விதிக்கிறது. இந்த புதிய சட்ட திருத்தத்தின் மூலம், துபாயில் 30 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படுவது என்பது கூடுதல் தண்டனையாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்துவது என்பது கவனத்தைச் சிதறடித்தல் என வரையறுக்கப்பட்டுள்ளது. சாலையில் பிற உயிர்களுக்கும் உடமைகளுக்கும் அல்லது போக்குவரத்து பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் திடீரென வாகனத்தை திருப்புவது, முன்னால் உள்ள வாகனத்திலிருந்து போதுமான பாதுகாப்பான தூரத்தை விட்டுச் செல்லாதது ஆகியவையும் 30 நாள் வாகன பறிமுதலுக்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒரு கனரக வாகனம் பாதை ஒழுக்கத்தை கடைபிடிக்கத் தவறினால் அதே கூடுதல் அபராதம் பொருந்தும் என்று கூறப்படுகிறது. மேலும், பின்வரும் போக்குவரத்து குற்றங்களுக்கு 14 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் திருத்தப்பட்ட சட்டம் குறிப்பிட்டுள்ளது:

  • போக்குவரத்தை உறுதி செய்யாமல் சாலையில் நுழைவது
  • பிறரது மற்றும் சொந்த உயிர் அல்லது உடைமை அல்லது போக்குவரத்து பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை பின்னோக்கி நகர்த்துதல்
  • லேன் (lane) விதிகளை ஒழுங்காக பின்பற்றாமல் இருத்தல்
  • காரணமே இல்லாமல் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்துவது
  • ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச் செல்லுதல்
  • வாகனத்தில் தேவையான பாதுகாப்பு நிலைமைகள் இல்லாதது
  • அவசரமற்ற சூழ்நிலைகளில் சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்துதல் அல்லது ஓரத்தில் இருந்து வாகனங்களை முந்திச் செல்வது
  • உரிமத் தகடு (license plate) இல்லாமல் வாகனம் ஓட்டுதல்
  • போக்குவரத்திற்கு இடையூறாக வாகனத்தை ஓட்டுதல்
  • அனுமதியின்றி வாகனத்தின் நிறத்தில் மாற்றம் செய்தல்

சாலையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு துபாய் கூடுதல் அபராதம் விதிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, கடுமையான போக்குவரத்து குற்றங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க 50,000 திர்ஹம்கள் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் சிவப்பு விளக்கை குதித்தல் ஆகியவை இதில் அடங்கும். விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து பல வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

நடப்பு ஆண்டின்  முதல் ஆறு மாதங்களில் துபாயில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் 94 விபத்துகள் நடந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, வாகனம் ஓட்டும் போது மூன்று வாகன ஓட்டிகளில் ஒருவர் தொலைபேசியைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

பத்தில் ஒன்பது ஓட்டுநர்கள் கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டுவது ஆபத்தானது என்று நினைக்கிறார்கள், ஆனால் 81 சதவிகிதம் அல்லது பத்தில் எட்டு வாகன ஓட்டிகள் மட்டுமே எப்போதும் சாலையில் முழுமையாக கவனம் செலுத்துகிறார்கள், அதாவது நம்மைச் சுற்றியுள்ள ஐந்து வாகன ஓட்டிகளில் ஒருவர் முழு கவனம் செலுத்துவதில்லை என்று RoadSafetyUAE மற்றும் Al Wathba இன்சூரன்ஸ் மூலம் நியமிக்கப்பட் ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel