ADVERTISEMENT

UAE வரும் சுற்றுலா பயணிகளும் இனி இமிக்ரேஷன் செயல்முறையை நொடிகளில் முடிக்கலாம்.. புதிய ‘ஆப்’ஐ அறிமுகம் செய்த ICP.!!

Published: 16 Oct 2024, 8:14 PM |
Updated: 16 Oct 2024, 8:40 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இனி பயோமெட்ரிக்ஸ் மற்றும் ஐரிஸ் ஸ்கேன்களுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் ஸ்மார்ட் கேட் வழியாக நடந்து இமிக்ரேஷன் நடைமுறைகளை சில நொடிகளில் முடித்து விடலாம்.

ADVERTISEMENT

அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் (ICP) ஒரு புதிய ஸ்மார்ட் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இரண்டு வாரங்களுக்குப் பிறகு துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெறும் ஜிடெக்ஸ் குளோபல் கண்காட்சியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICP அறிமுகப்படுத்தியுள்ள ‘UAE Pass Track’ என்ற மொபைல் ஆப், UAE க்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு முன்பு ஆன்லைன் வழியாக பதிவு செய்ய அனுமதிக்கிறது. அவர்கள் இந்த ஆப் மூலம் பதிவு செய்தவுடன், தற்சமயம் சையத் சர்வதேச விமான நிலையத்தில் (zayed international airport) ஸ்மார்ட் கேட்களைப் பயன்படுத்தலாம். இதனால் வரிசையில் நின்று தங்கள் இமிகிரேசன் நடைமுறைகளை முடிக்க காத்திருக்க வேண்டியதில்லை.

ADVERTISEMENT

தற்போது, ​​அபுதாபியில் உள்ள சையத் விமான நிலையத்தில் பெரும்பாலான பயணிகள் இதைப் பயன்படுத்தி வருகின்ற நிலையில், அடுத்த சில மாதங்களில், துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள விமான நிலையங்களில் இதை வெளியிட திட்டமிட்டுள்ளதாக Gitex Global தொழில்நுட்ப மாநாட்டில் உள்ள ICP அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இப்போது ICP மற்றும் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநர் (GDRFA) உடன் பதிவு செய்துள்ள அமீரகவாசிகள் இந்த செயலியைப் பயன்படுத்துகின்றனர். இது அவர்கள் ஸ்மார்ட் கேட்களைப் பயன்படுத்தவும், விமான நிலையங்களுக்கு புறப்படும்போது அல்லது வரும்போது நொடிகளில் இமிக்ரேஷன் செயல்முறையை முடிக்கவும் அனுமதிக்கிறது.

ADVERTISEMENT

அபுதாபி விமான நிலையம் 2024 முதல் அரையாண்டில் 13.9 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. DXB 2024இன் முதல் பாதியில் உலகம் முழுவதிலுமிருந்து 44.9 மில்லியன் பயணிகளைப் பெற்றுள்ளது. முன்னோக்கிச் செல்லும்போது, ​​ஒவ்வொரு மாதமும் துபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களைப் பயன்படுத்தும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த முயற்சி பயனளிக்கும்.

இது குறித்து ICP பெவிலியனில் உள்ள செய்தித் தொடர்பாளர் பேசிய போது, “பார்வையாளர்கள் முதன்முறையாக UAEக்கு வருவதால், அவர்கள் ஐரிஸ் மற்றும் பயோமெட்ரிக்ஸ் தரவுகளை ஸ்கேன் செய்ய வேண்டும். இப்போது, ​​அவர்கள் ஸ்மார்ட் கேட்டைப் பயன்படுத்தி, சில நொடிகளில் செயல்முறையை முடிக்க முடியும். அவர்கள் தங்கள் விமான எண் மற்றும் பாஸ்போர்ட் விவரங்களை உள்ளிட வேண்டும். இந்த அமைப்பு பாஸ்போர்ட்டில் இருந்து அனைத்து தகவல்களையும் பெறும்”என்று குறிப்பிட்டுள்ளார்.

ICPன் இந்த புதிய வசதி, எதிர்காலத்தில் அமீரகத்திற்கு வருகை தரும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளுக்கு நிறைய நேரத்தையும் தொந்தரவுகளையும் மிச்சப்படுத்தும் என்று கூறப்படுகிறது. தற்போது, ​​இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் சாதனங்களில் கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel