ADVERTISEMENT

ஓட்டுநர் உரிமத்திற்கான வயது வரம்பை குறைத்த அமீரகம்..!!

Published: 25 Oct 2024, 5:23 PM |
Updated: 25 Oct 2024, 5:48 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கார்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆகவும், மோட்டார் சைக்கிள்களுக்கான உரிமம் பெறுவதற்கான வயது 17 ஆகவும் தற்பொழுது வரை இருந்து வருகின்றது. இந்நிலையில் அமீரக அரசாங்கம் இன்று அறிவித்துள்ள புதிய போக்குவரத்து சட்டத்தின் படி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயது குறைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி நாட்டில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 17 ஆக குறைக்கப்படும் என்ற புதிய போக்குவரத்துச் சட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. அமீரக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இந்த போக்குவரத்து விதிமுறைகள் குறித்த புதிய கூட்டாட்சி ஆணை சட்டம், அடுத்தாண்டு மார்ச் 29ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தற்பொழுது புதிய சட்டத் திருத்தத்தின் படி, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் இரண்டிற்கும் சட்டப்பூர்வ வயது ஒரே மாதிரியாக இருக்கும். மேலும், இந்த சட்ட திருத்தத்தின் மூலம், வளைகுடா நாடுகளில் ஓட்டுநர்களுக்கான சட்டப்பூர்வ வயது வரம்பை குறைக்கும் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

GCC உறுப்பு நாடுகளான பஹ்ரைன் மற்றும் ஓமானில் ஓட்டுநர் உரிமத்தைப் பெறக்கூடிய வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், சவுதி அரேபியாவில் வாகனங்களைப் பொறுத்து வயது வரம்புகள் மாறுபடும். அதாவது, மோட்டார் சைக்கிள்களுக்கான உரிமம் பெற ஒருவருக்கு 16 வயதும், கார்களுக்கான உரிமத்தைப் பெற 18 வயதும், தற்காலிக அனுமதி பெற 17 வயதும் இருக்க வேண்டும்.

கத்தாரில் இரண்டு வெவ்வேறு வயது தேவைகள் உள்ளன. இலகுரக வாகனங்களுக்கான உரிமம் பெறுவதற்கு ஒருவர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும், அதே சமயம் கனரக வாகனங்களுக்கான உரிமத்திற்கான சட்டப்பூர்வ வயது வரம்பு 21 ஆகும்.

ADVERTISEMENT

மேலும், குவைத்தில் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு வெவ்வேறு வயது வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. குவைத் நாட்டினருக்கு குறைந்தபட்ச வயது 18 ஆகும், அதே சமயம் ஒரு வெளிநாட்டவருக்கு ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க 21 வயது இருக்க வேண்டும்.

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான வயது வரம்புகள் 15 முதல் 18 வரை மாறுபடும், ஆனால் சில நாடுகளில் 14 இல் உரிமத்தைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் ஓட்டுநர்களுக்கான குறைந்த வயது வரம்புகளைக் கொண்ட சில நாடுகளின் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

  • எஸ்டோனியா – 14 (mopeds)
  • ஹங்கேரி – 14 (50ccக்கு குறைவான வாகனங்களுக்கு)
  • லாட்வியா – 14 (மொபெட்ஸ்)
  • போலந்து – 14 (மொபெட்ஸ் மற்றும் குவாட்ஸ்)
  • சுவிட்சர்லாந்து – 14 (மொபெட்கள் மற்றும் டிராக்டர்கள்)
  • பிரான்ஸ் -15 (கண்காணிப்புடன்)
  • டென்மார்க் – 15 (மொபெட்ஸ்)
  • மெக்சிகோ – 15 (பெற்றோரின் மேற்பார்வையுடன்)
  • குரோஷியா – 15 (மொபெட்ஸ்)
  • ஜெர்மனி – 15 (மொபெட்கள், ஸ்கூட்டர்கள் மணிக்கு 25 கிமீ வேகத்தில்)
  • கேமரூன் -16
  • மொராக்கோ – 16 (மோட்டார் சைக்கிள்கள்)
  • செனகல் – 16
  • ஜிம்பாப்வே – 16
  • அர்ஜென்டினா – 16 (மொபெட்ஸ்)

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel