சாலைகளில் வாகனங்களை திடீர் திருப்புதல் காரணமாக துபாய் முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் இந்த ஆண்டு மொத்தம் 32 பேர் உயிரிழந்துள்ளதாக துபாய் காவல்துறை செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து எண்ணிக்கை எமிரேட்டில் வாகன ஓட்டிகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என்று துபாய் காவல்துறையின் போக்குவரத்து விழிப்புணர்வுப் பிரிவின் தலைவர் சல்மா முகமது ரஷீத் அல்மரி குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாயன்று ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பேசிய அல்மரி, துபாயில் ஏற்படும் சாலை மரணங்களுக்கு வாகன ஓட்டிகளின் திடீர் திருப்பம் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிக்கிறது என்றும், இந்த ஆபத்தான நடத்தை காரணமாக 32 இறப்புகள் பதிவாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் அல்மரி தொடர்ந்து பேசுகையில், இந்த விபத்துகளின் பின்னணியில் பலதரப்பட்ட காரணங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டியதுடன், “ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டும்போது உடல்நலப் பிரச்சினைகள், சோர்வு அல்லது கவனச்சிதறல்களை அனுபவிக்கலாம். குறிப்பாக வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்துவது காரணங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவதற்கு எதிராக துபாய் போலீசார் தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, அதிகம் டின்ட் செய்யப்பட்ட கார் கண்ணாடிகளுக்கு பின்னால் மறைந்து கொள்வதன் மூலம் விதிமீறல்களைக் கண்டுபிடிக்க முடியாது மற்றும் அபராதத்தைத் தவிர்க்கலாம் என்று வாகன ஓட்டிகள் தவறாக நினைக்கிறார்கள்.
ஆனால், இப்போது மொபைல் போன் பயன்பாடு உட்பட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிய மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பம் இப்போது பயன்படுத்தப்படுகிறது. இந்த ஸ்மார்ட் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அதிகளவு டின்ட் செய்யப்பட்ட கார்களுக்குள் மேற்கொள்ளப்படும் விதிமீறல்களைக் கூட கண்டறிய முடியும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களைப் பயன்படுத்துவது உட்பட பல போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்கின்றனர். இந்த விதி மீறலைச் செய்பவர்கள் 400 முதல் 1,000 திர்ஹம்ஸ் வரையிலான அபராதம் மற்றும் அவர்களின் ஓட்டுநர் உரிமத்தில் நான்கு ப்ளாக் பாயிண்ட்கள் உட்பட 30 நாட்களுக்கு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம்.
இது குறித்து தெரிவிக்கையில் “இந்த கடுமையான அமலாக்கம் அனைத்து சாலை பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அதிகாரிகளின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்றும் அல்மரி வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel