ஐக்கிய அரபு அமீரகத்தில் போக்குவரத்து விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சில பொறுப்பற்ற வாகன ஓட்டிகள் கவனத்தைச் சிதறடித்து வாகனம் ஓட்டுவதால் பயங்கர விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனாலேயே இப்போது அமீரகத்தின் பெரும்பாலான சாலைகளில் சீட் பெல்ட் அணியாதது மற்றும் மொபைல் போன்களைப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு சாலைப் பாதுகாப்பு மீறல்களைக் கண்டறியும் ஸ்மார்ட் மற்றும் மேம்பட்ட கேமராக்களை அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர்.
இந்த நவீன ஸ்மார்ட் ட்ராஃபிக் கேமராக்கள் சீட் பெல்ட் அணியாதது, மொபைல் போன் பயன்பாடு போன்ற பல்வேறு மீறல்களைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டும் நிகழ்வுகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி வெள்ளிக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கார் கண்ணாடிகள் அதிகளவு டின்ட் (tint) செய்யப்பட்டிருந்தாலும் கூட ஸ்மார்ட் கேமராக்கள் மூலம் பல்வேறு மீறல்களைக் கண்டறிய முடியும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். UAE போக்குவரத்து சட்டத்தின் படி, சாலையில் கவனமின்றி மொபைல் போன்களைப் பயன்படுத்தியவாறு வாகனம் ஓட்டுவது, டெயில்கேட்டிங் மற்றும் திடீர் விலகல் உள்ளிட்ட பல போக்குவரத்து குற்றங்களுக்காக 400 முதல் 1,000 திர்ஹம் வரை அபராதம் மற்றும் 4 ப்ளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படுவதுடன் வாகனங்கள் 30 நாட்கள் வரை பறிமுதல் செய்யப்படும் என்பதை அல் மஸ்ரூயி வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டியுள்ளார்.
மேம்பட்ட தொழில்நுட்பம்
இது குறித்து செய்தி ஊடகங்களிடம் பேசிய Vitronic Machine Vision இன் CEO, யூசுஃப் அல் ஹன்சலி, AI தொழில்நுட்பத்துடன் இணைந்த மேம்பட்ட புகைப்பட தொழில்நுட்பம் மூலம், ஸ்மார்ட் கேமரா அமைப்பு ஒரு வாகன ஓட்டுநர் காருக்குள் மொபைல் போனைப் பயன்படுத்துவதைப் பிடிக்கிறது என்று விளக்கியுள்ளார்.
இந்த ஸ்மார்ட் கேமரா அமைப்பு காரின் முன்பக்கத்தில் இருந்தும், பக்கவாட்டில் இருந்தும் புகைப்படங்களை எடுக்கும் என்பதால் மீறல் செய்யும் வாகன ஓட்டியை எளிதாக அடையாளம் கண்டு அமீரக அதிகாரிகளால் அடுத்த நடவடிக்கைக்காக எடுக்கப்பட்டு செயலாக்கப்படுகிறது. அது மட்டுமின்றி, இந்த ஸ்மார்ட் கேமரா அமைப்பு அதிகம் டின்ட் செய்யப்பட்ட கார் கண்ணாடிகளை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டது என்று அல் ஹன்சாலி மேலும் கூறியுள்ளார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு வகையான ஸ்மார்ட் போக்குவரத்து அமலாக்கத்தின் விரைவான வரிசைப்படுத்தலைக் கண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
முன் வேக கேமராக்கள், பின்புற வேக கேமராக்கள், மொபைல் போன்களைக் கண்டறியும் கேமராக்கள், சீட் பெல்ட்டைக் கண்டறியும் கேமராக்கள், அதே போல் பாதுகாப்பான தூரம், லேன் ஒழுக்கம் மற்றும் சிவப்பு விளக்குகளைத் தாண்டிச் செல்வதைக் கண்டறியும் கேமராக்கள் போன்றவை இன்று பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் என்று கூறிய ஹன்சலி, போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு உருவாக்கத்திற்கான தரவை அணுகுதல் போன்ற போக்குவரத்து மேலாண்மை தீர்வுகளுக்கும் கேமராக்கள் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
மொபைல் ஃபோனை தவறாகப் பயன்படுத்துவது கவனச் சிதறலுக்கு முக்கிய காரணமாகும், ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், வாகனம் ஓட்டும்போது மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைக் கண்டறியும் தொழில்நுட்ப திறன்கள் அதிகாரிகளிடம் உள்ளது என்று ஹன்சலி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கவனச்சிதறலே விபத்துகளுக்கு முக்கிய காரணம்
Road Safety UAEயின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான தாமஸ் எடெல்மேன் முன்னதாக செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், வாகனம் ஓட்டும் போது குறுஞ்செய்தி அனுப்புபவர்கள் விபத்தில் சிக்குவதற்கு 20 மடங்கு அதிக வாய்ப்புள்ளது என்றும், குறிப்பாக மொபைல் ஃபோன் பயன்பாடு காரணமாக கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டுவது, நமது சாலைகளில் மிகப் பெரிய குற்றம் என்றும் கூறினார்.
2023 ஆம் ஆண்டிலிருந்து உள்துறை அமைச்சகத்தின் தரவு, கவனத்தைச் சிதறடித்து வாகனம் ஓட்டுவது விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது என்றும், கவனம் செலுத்தும் வாகன ஓட்டிகளுடன் ஒப்பிடும்போது, திசைதிருப்பப்பட்ட வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்றும் சர்வதேச ஆய்வுகள் காட்டுகின்றன.
அபுதாபி காவல்துறை, வாகன ஒட்டிகளிடையே சாலைப் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற பல்வேறு அதிர்ச்சியூட்டும் விபத்துக் காட்சிகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறது. மேலும், அபுதாபி காவல்துறையினர் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கவனச்சிதறலின் ஆபத்துகள் குறித்து ஓட்டுநர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“சாலை விபத்து இறப்புகளைக் குறைக்கும் மூலோபாய இலக்குடன் போக்குவரத்துப் பாதுகாப்பில் உலகத் தலைவராக” நாட்டை உருவாக்குவதற்கான அவர்களின் நோக்கத்திற்கு ஏற்ப ஸ்மார்ட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் இதற்கு அனைத்து சாலை பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டிய வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel