ADVERTISEMENT

துபாயில் அனுமதியின்றி வாகனங்களில் மாற்றங்களைச் செய்தவர்களுக்கு கடும் அபராதம்..!!

Published: 22 Nov 2024, 7:19 PM |
Updated: 22 Nov 2024, 7:19 PM |
Posted By: Menaka

துபாயில் அதிக சத்தம் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்தக் கூடிய வகையில், வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத மாற்றங்களைச் செய்ததற்காக இந்த ஆண்டு ஜனவரி முதல் சுமார் 12,000க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு துபாய் காவல்துறை அபராதம் விதித்துள்ளது என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

எமிரேட்டில் அனுமதியின்றி வாகனத்தின் எஞ்சின் அல்லது சேசிஸில் (chassis) கணிசமான மாற்றங்களைச் செய்வதும் விதிமீறல்களாகக் கருதப்படுகிறது. அதன்படி, இதுவரை மொத்தம் 5,523 மாற்றியமைக்கப்பட்ட இரைச்சலான வாகனங்களின் ஓட்டுநர்களுக்கும், கார் என்ஜின்களில் அங்கீகரிக்கப்படாத மாற்றங்களைச் செய்த 6,496 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இத்தகைய இரைச்சலை ஏற்படுத்தும் மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டுவது 2,000 திர்ஹம்ஸ் அபராதம்  மற்றும் 12 ப்ளாக் பாயின்ட்கள் விதிக்கக் கூடிய கடுமையான போக்குவரத்து குற்றங்களில் ஒன்றாகும் என்று துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், மீறுபவர்கள் தங்கள் பறிமுதல் செய்யப்பட்ட கார்களை விடுவிக்க 10,000 திர்ஹம்கள் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து துபாய் காவல்துறையின் போக்குவரத்துப் பொதுத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி பேசுகையில், “என்ஜின் வேகத்தை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களுடன் வாகனங்களை மாற்றியமைப்பதால், அதிக சத்தத்தை உருவாக்கி குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் அல்லது பிறரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டுநர்களை சட்டம் தண்டிக்கும் என்பதையும் அல் மஸ்ரூயி குறிப்பிட்டார்.

ஆகவே, துபாய் காவல்துறையின் ஸ்மார்ட் அப்ளிகேஷனில் கிடைக்கும் “Police Eye”அல்லது “We Are All Police” சேவைகள் மூலமாகவோ அல்லது 901 என்ற ஹாட்லைன் மூலமாகவோ, இதுபோன்ற எதிர்மறையான மற்றும் ஆபத்தான நடத்தைகளை புகாரளிக்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel