துபாயில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வரும் பிரசித்தி பெற்ற துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் இந்த வருடத்திற்கான சீசன் விரைவில் துவங்கவிருக்கின்றது. துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் இந்த புதிய 30வது சீசனானது வருகின்ற டிசம்பர் மாதம் 6ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே DSF நடைபெறும் சமயங்களில் ராஃபிள் மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
அதேபோல் டிசம்பர் 6, 2024 முதல் ஜனவரி 12, 2025 வரை நடைபெற உள்ள இந்த விற்பனை நிகழ்வின் ஒரு பகுதியாக நடத்தப்படும் மெகா ரேஃபிளில் 100,000 திர்ஹம் ரொக்கப் பரிசுடன் புத்தம் புதிய Nissan X-Trail, Nissan Xterra, Nissan Kicks, Nissan Altima அல்லது Nissan Safari போன்ற கார்களை வெல்லும் வாய்ப்பையும் பெறலாம் என சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கிய பரிசுகளைத் தவிர, ரேஃபிளுக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் இரண்டாவது டிராவில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அந்த வாராந்திர டிராவில் ஒரு வெற்றியாளர் புதிய Nissan Patrol கிராண்ட்பரிசைப் பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் ஃபெஸ்டிவல் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு தினசரி வெற்றியாளரை மகுடம் சூட்டும் DSF மெகா ரேஃபிளில் அனைவரும் பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது. ரேஃபிள் டிக்கெட்டை வாங்கும் எவரும் இந்த பரிசுகளை வெல்லும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ரேஃபிள் டிக்கெட்டுகளை துபாய் முழுவதும் உள்ள ENOC சேவை நிலையங்கள் அல்லது ZOOM கடைகளில் வாங்கலாம். கூடுதலாக, குளோபல் வில்லேஜ் மற்றும் நகரம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட கியோஸ்க்களில் ரேஃபிள் டிக்கெட்டை வாங்கும் போது ரேஃபிளில் பதிவு செய்வதற்கான விருப்பங்களும் உள்ளன. ஒவ்வொரு ரேஃபிள் டிக்கெட்டின் விலை 100 திர்ஹம்ஸ் ஆகும்.
அத்துடன் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் 30 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஷாப்பிங் ஃபெஸ்டிவல் நடைபெறும் 38 நாட்கள் முழுவதும், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் துபாய் லைட்ஸ், வானவேடிக்கைகள், இலவச உலகத் தரம் வாய்ந்த ட்ரோன் ஷோக்கள் ஆகியவற்றின் அற்புத காட்சிகளைக் காண முடியும். இந்தாண்டு ஷாப்பிங் ஃபெஸ்டிவலானது, 321 ஃபெஸ்டிவல் உள்ளிட்ட நேரடி இசை நிகழ்ச்சிகளின் வரிசையில் உலகின் மிகப்பெரிய கலைஞர்கள் மற்றும் பிரபலங்கள் ஆகியோரின் நிகழ்ச்சிகளை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் DSF நிகழ்வுகளின் முழு காலெண்டர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel