துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் மாபெரும் உடற்பயிற்சி நிகழ்வுகளில் ஒன்றான துபாய் ரன் நவம்பர் 24 அன்று துபாயின் புகழ்பெற்ற ஷேக் சையத் சாலையில் தொடங்க உள்ளது. ஒரு மாத கால உடற்தகுதி சவாலின் இறுதிப் போட்டியான துபாய் ரன்னில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்பதைக் காணலாம்.
இந்த நிகழ்வில் பங்கேற்பாளர்களுக்கு இரண்டு பாதை விருப்பங்கள் உள்ளன. ஒன்று ஆரம்ப மற்றும் குடும்பங்களுக்கான 5 கிமீ பாதை, மற்றொன்று அனுபவமுள்ள ஓட்டப்பந்தய வீரர்களுக்கான மிகவும் சவாலான 10 கிமீ பாதை ஆகும். எனவே, ஒரு புதிய தனிப்பட்ட உடற்பயிற்சி சாதனையை பதிவு செய்ய விரும்புபவர்களாக இருந்தாலும், வேடிக்கைக்காக பங்கேற்க விரும்பினாலும் துபாய் ரன்னில் பங்கேற்பவர்கள் மனதில் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.
மாபெரும் ஓட்டப் பந்தய நிகழ்வில் பங்கேற்பதற்கு முன் உங்கள் உடலைத் தயார் செய்வது குறித்து உடற்பயிற்சி நிபுணர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சில ஆலோசனைகள் மற்றும் உதவிக்குறிப்புகளை வழங்கியுள்ளனர். அவற்றைப் பின்வருமாறு பார்க்கலாம்.
வார்ம்-அப் உடன் தொடங்குவது சிறந்தது
துபாய் ரன் நடைபெறும் நாளன்று பந்தயத்தில் ஈடுபடுவதற்கு முன்பாக கை, கால்களை நீட்டி மடக்கி லேசான உடற்பயிற்சி செய்யுமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி, பங்கேற்பாளர்கள் ஓடுவதற்கு முன் சிறந்த வார்ம்-அப், லைட் கார்டியோ செய்வது நல்லது. எடுத்துக்காட்டாக, ஜாகிங் அல்லது வேறு ஏதேனும் உடற்பயிற்சியைத் தொடர்ந்து 5-10 நிமிட பயிற்சிகளைச் செய்யலாம். மேலும், 20 சதவீத ஏரோபிக் திறனுக்கு சமமான வேகத்தில் வேகமாக நடப்பதும் உதவியாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சாப்பிட வேண்டியவை
இதுபோன்ற பந்தயத்தில் ஓடுவதற்கு தேவையான ஆற்றலை உணவு மூலம் பெறுவது அவசியம். காய்கறியோ, இறைச்சியோ எதுவாக இருந்தாலும் புரதச் சத்து அவசியம். அதுமட்டுமின்றி, தசைகள் சுருங்குவதற்கு கால்சியமும், தளர்வு மற்றும் பிடிப்புகள் ஏற்படுவதைக் குறைக்க பொட்டாசியமும் அவசியம். எனவே, துபாய் ரன் நிகழ்வு நடைபெறும் நாளில், புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். உதாரணமாக ஆரஞ்சு சாறுடன் வேகவைத்த முட்டை போன்ற லேசான ஆனால் ஆற்றல் நிறைந்த ஏதாவது ஒன்றை சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதாவது, ஓடுவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் உணவை சாப்பிட வேண்டும் அல்லது வாழைப்பழம் அல்லது கிரானோலா பார் போன்ற சிறிய தின்பண்டங்களை சாப்பிடலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லுங்கள்
பங்கேற்பாளர்கள் உடலை எப்போதும் ஹைட்ரேட் செய்வது முக்கியம். ஓடும்போது ஒவ்வொரு 5-10 நிமிடங்களுக்கும் அல்லது அதற்கும் மேலாக ரீஹைட்ரேட் செய்வது நல்லது என்றும், ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்துச் செல்லுமாறும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காயங்களைத் தவிர்த்தல்
பந்தயத்தின் போது, காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க ஓடும் வேகத்தை படிப்படியாக அதிகரிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது, உடலில் ஏதேனும் வலி ஏற்பட்டால் எந்த அறிகுறியையும் புறக்கணிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதேசமயம், காயங்களைத் தவிர்க்க அன்றைய தினம் சரியான பாதணிகள் அணிய வேண்டிய முக்கியத்துவத்தையும் நிபுணர்கள் எதுத்துரைக்கின்றனர். குறிப்பாக, சோர்வைத் தடுக்க ஓய்வு காலங்கள், சீரான ஊட்டச்சத்து, நீரேற்றம் மற்றும் தரமான தூக்கம் ஆகியவை முக்கியம் என்பதையும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது தவிர, நீண்ட தூரம் ஓடுவதற்கு ஒரு நிலையான மற்றும் அமைதியான டெம்போவில் செல்வதன் மூலம் ஆற்றலை நீண்ட நேரம் சேமிக்க உதவுவது மட்டுமல்லாமல், ஓடும்போது காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது என்று வலியுறுத்தியுள்ளனர்.
வேறு சில குறிப்புகள்
மற்ற நாட்களைப் போலவே, ஓட்டத்திற்கு முந்தைய இரவில் எட்டு மணிநேர தூக்கம் அவசியம் என்று குறிப்பிடும் மருத்துவர்கள், இரவில் 7-8 மணி நேரம் தூங்குமாறு பரிந்துரைக்கின்றனர். மேலும், அந்த நாளில் வானிலை கொஞ்சம் குளிராக இருக்கும் என்பதால், அதற்கேற்றவாறு உங்கள் உடலை பராமரித்துக்கொள்ளுங்கள் என்றும் பங்கேற்பாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இறுதியாக, ஓட்டப்பந்தய வீரர்களுக்கு 36-48 மணிநேரங்களுக்கு முன்பு stretches செய்வதை தவிர்த்து மற்ற உடற்பயிற்சி செய்வதை நிறுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel