ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுவாகவே கடுமையான போக்குவரத்துச் சட்டங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அமீரகத்தின் போக்குவரத்துச் சட்டத்தை, வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு அபராதமும் ப்ளாக் பாய்ண்ட்ஸூம் விதிக்கப்படுகின்றது. எனவே இந்த போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிப்பது வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரின் கடமையாகும்.
அதில் முக்கியமான ஒரு விதியாக இருப்பது பாதையை (lane) ஒழுங்காக பின்பற்றி ஓட்டுவதாகும். அமீரகத்தை பொறுத்தவரை நாடு முழுவதும் சாலைகளில் வெவ்வேறு நிறங்களில் கோடுகள் வரையப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்த கோடுகளை சரியாக கவனித்து வாகனம் ஓட்ட வேண்டும்.
ஓட்டுநர்கள் பாதையை மாற்றும் போது, லேன் (lane) தொடர்புடைய விதிகளை மீறினால் 400 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும், இந்த விதியைக் கடைப்பிடிக்காததால் ஏற்படும் அபாயகரமான விளைவு குறித்தும் பல்வேறு எமிரேட்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமீரகத்தில் சாலைகளில் கடைபிடிக்க வேண்டிய லேன் விதிகள் மற்றும் தொடர்புடைய விதிகளை மீறுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பதைப் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்:
விதிகள்
துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இலகுரக வாகன ஓட்டுநர் வழிகாட்டியின்படி, ஒழுங்குமுறை சாலை அடையாளங்கள் (regulatory road markings) நீங்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை உங்களுக்குத் தெரிவிக்கின்றன. பொதுவாக சாலை அடையாளங்கள் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். வாகன ஓட்டிகள் அந்த நிறத்திற்குண்டான விதிகளை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைப்பிடிக்கவில்லை என்றால், நீங்கள் போக்குவரத்துச் சட்டத்தை மீறுகிறீர்கள் என்று அர்த்தம்.
பாசிங் லைன் இல்லாமல் (no passing line) சாலை இருந்தால்
சாலையில் passing line இல்லாமல் திடமான கோடு இருப்பதைக் காணலாம். அவ்வாறு இருந்தால் அவசரகாலம் தவிர, மற்ற நேரங்களில் வேறொரு வாகனத்தை முந்திச் செல்லவோ அல்லது திருப்பவோ இந்தக் கோட்டைக் கடக்கக் கூடாது.
ஸ்டாப் லைன்
சாலைகளில் ஸ்டாப் சைன் அல்லது ட்ராஃபிக் சிக்னல்கள் உள்ள இன்டர்செக்ஷனை நெருங்கினால், பாதை முழுவதும் வெள்ளை நிற ஸ்டாப் லைன் வரையப்பட்டிருக்கும். ஸ்டாப் சைன் மற்றும் ஸ்டாப் லைன் இருக்கும் இடத்தில், கோட்டிற்கு முன் முழுமையாக வாகனத்தை நிறுத்த வேண்டும். சிக்னல் பச்சை நிறமாக மாறி, ஜங்க்ஷன் தெளிவாக இருக்கும் வரை இந்தக் கோட்டைக் கடக்கக்கூடாது.
கிவ் வே (give way) லைன்
கிவ் வே அடையாளம் இருக்கும் இடத்தில், போக்குவரத்தை நெருங்கும் பாதையின் குறுக்கே உடைந்த வெள்ளைக் கோடும் இருக்கும். இந்த அடையாளம் உள்ள இடத்தில் உங்கள் பாதையைக் கடக்கும் எந்தவொரு வாகனம் அல்லது பாதசாரிக்கும் நீங்கள் வழி விட வேண்டும். இன்டர்செக்சன் தெளிவாக இருப்பதை எப்போதும் உறுதிசெய்து செல்வது பாதுகாப்பானது.
பாதசாரிகளுக்கான பாதை (pedestrian crossing)
பாதசாரிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு கிராசிங் தெளிவாகத் தெரியும் வகையில், சாலையின் குறுக்கே தடிமனான வெள்ளைக் கோடுகளால் குறிக்கப்பட்டிருக்கும். இந்த கிராசிங்கில் பாதசாரிகளுக்கு வழிவிட வேண்டும். இது தவிர, சாலைகளில் பேருந்துகள் மற்றும் டாக்ஸிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரத்யேகமான பாதைகளைப் பயன்படுத்துதல் அல்லது சாலையில் ஓரத்தைப் பயன்படுத்துவது போன்ற பிற பாதை ஒழுங்குமுறை தொடர்பான விதிகளும் உள்ளன. இந்த விதிகளை மீறினால் அதிக நிதி அபராதம் மற்றும் ப்ளாக் பாயின்ட்களுக்கு வழிவகுக்கும்.
லேன் விதி மீறல்கள் எப்படி கேமராவில் பிடிபடுகின்றன?
அமீரகம் முழுவதும் காவல்துறையினரால் பயன்படுத்தப்படும் நவீன போக்குவரத்து அமைப்புகள் இந்த விதிமீறல்களைக் கண்டறியும் என்று துபாய் காவல்துறை சமீபத்திய அறிவிப்பில் வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது.
முன்னதாக, அபுதாபி காவல்துறை, எமிரேட்டில் உள்ள பல ஜங்க்ஷன் மற்றும் இன்டர்செக்ஷன்களில் வைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கேமராக்கள் மூலம் இதுபோன்ற விதிமீறல்கள் படம்பிடிக்கப்பட்டு, 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்றும் வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது. மேலும் வலதுபுறப் பாதையில் இருந்து ஒரு வாகனத்தை சட்டவிரோதமாக முந்திச் சென்றால், 600 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
திடீர் திருப்பம் (sudden swerving)
உங்கள் கார் சீராக சென்று கொண்டிருக்கும் போது திடீரென வாகனத்தின் திசையை மாற்றுவது லேன் ஒழுங்குமுறை மீறலின் மற்றொரு தீவிர வடிவமாகும். ஏனெனில் இது அமீரகத்தில் ஏற்படும் விபத்துகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும், இது பெரும்பாலும் கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகிறது.
இந்த ஆண்டு, துபாயில் மட்டும், திடீர் திருப்பம் அல்லது கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன. அமீரகத்தில் கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டினால் 800 திர்ஹம் அபராதமும், ஓட்டுநர் உரிமத்தில் நான்கு ப்ளாக் பாயின்ட்களும் விதிக்கப்படும்.
துபாயில், கடந்த அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிகள் இந்தக் குற்றத்திற்கான அபராதங்களை அதிகரித்துள்ளன, மேலும் வாகனம் ஓட்டும்போது தொலைபேசி அல்லது பிற சாதனங்களைப் பயன்படுத்தினால் கவனத்தை சிதறடித்ததற்காக காரை 30 நாட்களுக்கு பறிமுதல் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel