அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உள்ள அல் தஃப்ரா பிராந்தியத்தில், உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் பாலைவன சாகசங்களுக்கு பெயர் பெற்ற ‘LIWA ஃபெஸ்டிவல் 2025’ இன்று டிசம்பர் 13 முதல் தொடங்கி ஜனவரி 4 வரை நடைபெற உள்ளது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரமான குன்றுகளான தால் மொரீப்பின் (Tal Moreeb) அடிவாரத்தில் நடைபெறும் இந்த ஃபெஸ்டிவலில், டூன் பேஷிங் மற்றும் டிரிஃப்டிங் (dune bashing and drifting) போன்ற பரபரப்பான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகள் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
இந்த உற்சாகமான பாலைவன நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக எட்டு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அபுதாபி காவல்துறை அறிவித்துள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது, அனைவரது பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், சில நடத்தைகள் அனுமதிக்கப்படாது. எனவே, இந்த முக்கியமான விதிகளை மதித்து, அனைத்து விழாக்களையும் அனுபவிக்குமாறு பார்வையாளர்களை அபுதாபி காவல்துறை வலியுறுத்தியுள்ளது:
1. தால் மொரீப்பில் அமைக்கப்ட்டிருக்கும் முகாம்களைச் சுற்றி ஆபத்தான முறையில் கார்கள் அல்லது மோட்டார் சைக்கிள்களை அணிவகுத்துச் செல்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
2. விபத்துகளைத் தடுக்க, பார்வையாளர்கள் மலையில் ஏறும்போது அல்லது இறங்கும்போது பாதை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும், குறிப்பாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்கள் இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
3. கூடுதலாக, அனைத்து வகையான மோட்டார் சைக்கிள்களும் நடைபாதை சாலைகளில் அனுமதிக்கப்படாது, மேலும் பைக் ஓட்டுபவர்கள் ஹெல்மெட்களை கண்டிப்பாக அணிய வேண்டும்.
4. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் இருக்க வேண்டும். பெற்றோர் பாதுகாப்பு இல்லாமல் தனிநபராக மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்ல அனுமதிக்கப்படாது.
5. 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, நியமிக்கப்பட்ட பகுதிகளில் மேற்பார்வையின்றி சவாரி செய்வதும் அனுமதிக்கப்படாது.
6. வாகனங்கள் அல்லது மோட்டார் சைக்கிள்களில் இருந்து இடையூறு விளைவிக்கும் ஒலிகள் தடைசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, முகாம்களுக்கு அருகில் இரைச்சல் ஏற்படுத்தக்கூடாது.
7. பார்வையாளர்கள் போக்குவரத்து வழிமுறைகளைப் பின்பற்றவும், சீட் பெல்ட்களை அணியவும், முகப்பு விளக்குகளை இயக்கவும், கொண்டாட்டம் நடைபெறும் மைதானத்தைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் வேக வரம்புகளைப் பின்பற்றவும் வேண்டும்.
8. எல்லாவற்றிற்கும் மேலாக, அதிகாரிகளின் முன் அனுமதியின்றி விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் கிளைடர்களை இப்பகுதியில் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
எனவே, இன்று முதல் தொடங்கும் LIWA ஃபெஸ்டிவலின் சாகச கொண்டாட்டங்களை நேரில் காண வரும் பார்வையாளர்கள் மேற்கூறிய அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்றி பாதுகாப்புடன் கொண்டாடுவதை உறுதி செய்யுமாறு அபுதாபி காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel