ADVERTISEMENT

துபாயில் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட ‘அய்ன் துபாய்’..!! டிக்கெட் முன்பதிவும் தொடக்கம்..!!

Published: 26 Dec 2024, 2:04 PM |
Updated: 26 Dec 2024, 5:48 PM |
Posted By: Menaka

வானுயர் கட்டிடங்கள், வியக்க வைக்கும் உள்கட்டமைப்பு மற்றும் அடையாள சின்னங்களுடன் உலகெங்கிலும் இருந்து சர்வதேச பார்வையாளர்களை ஈர்த்துக் கொண்டிருக்கும் துபாயில் இரண்டு வருடங்களுக்கு முன்பு மூடப்பட்ட பிரம்மாண்ட சுற்றுலா ஈர்ப்பானது தற்போது மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆம், உலகின் மிகப்பெரிய ஃபெர்ரிஸ் வீலான (ferris wheel) ‘அய்ன் துபாய்’ (Ain Dubai) நேற்று டிசம்பர் 25ம் தேதி அன்று குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. மேலும், சீரமைப்பு பணிகளுக்காக கடந்த மார்ச் 2022 முதல் மூடப்பட்டிருந்த அய்ன் துபாய்க்கு டிக்கெட் முன்பதிவும் இப்போது திறக்கப்பட்டுள்ளது.

ஆகவே, உலகின் மிகப்பெரிய இந்த ஃபெர்ரிஸ் வீலில் சுற்றிவர விரும்பும் பார்வையாளர்கள் தங்களின் டிக்கெட்டுகளை இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும் இதற்கான டிக்கெட் விலை 145 திர்ஹம்ஸ் முதல் தொடங்குவதாகவும் அய்ன் துபாய் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அய்ன் துபாயின் இணையதளத்தில் மூடல் குறித்து பார்வையாளர்களுக்குத் தெரிவிக்கும் ஹோல்டிங் செய்தி நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, பல்வேறு டிக்கெட் விருப்பங்கள் தற்போது பட்டியலிடப்பட்டுள்ளது:

  • வியூஸ்: 145 திர்ஹம்ஸ்
  • வியூஸ் ப்ளஸ்: 195 திர்ஹம்ஸ்
  • பிரீமியம்: 265 திர்ஹம்ஸ்
  • விஐபி: 1,260 திர்ஹம்ஸ்

ADVERTISEMENT

இதனிடையில் சுமார் ​​250 மீட்டர் உயரமுள்ள இந்த ஃபெர்ரிஸ் வீல் தற்போது முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளதாக வாடிக்கையாளர் பராமரிப்பு பிரதிநிதி (customer care representative) ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் பல பார்வையாளர்களும் இதில் பயணம் செய்து சிறந்த அனுபவத்தை பெற்றுள்ளனர். தற்பொது வெளிவந்துள்ள செய்திகளின் படி, இது செவ்வாய் முதல் வெள்ளி வரை மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் செயல்படும் என்பது தெரிய வந்துள்ளது.

இங்கு மொத்தம் 1,750 பேர் அமரக்கூடிய 48 அறைகள் உள்ளன. தரையில் இருந்து மிக உயரமான அறையின் உச்சி வரை, அய்ன் துபாய் நகரத்தின் மீது 250 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள ஹை ரோலரை விடவும் 82 மீட்டர் உயரம் கொண்டதாகும்.

சுமார் 38 நிமிடங்கள் நீடிக்கும் ஒவ்வொரு சவாரியிலும் துபாயின் வானலையின் 360 டிகிரி காட்சியை பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கலாம். துபாயில் உள்ள புளூவாட்டர்ஸ் தீவில் அமைந்துள்ள அய்ன் துபாய், அக்டோபர் 2021 இல் திறக்கப்பட்டு பின்னர் மார்ச் 2022 இல் மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel