அமீரகம் முழுவதும் இன்னும் ஓரிரு வாரங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிடும். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துபாயில் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, துபாய்வாசிகளும் பார்வையாளர்களும் ஆவலுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றனர்.
புத்தாண்டைத் தொடர்ந்து, பண்டிகைகள், ஷாப்பிங் நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் என வரவிருக்கும் 2025ஆம் ஆண்டில் வரிசையாக ஏராளமான நிகழ்சிகளும் அனுபவங்களும் காத்திருக்கின்றன. துபாயில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளின் அனைத்து ரசனைகளையும் ஆர்வங்களையும் பூர்த்தி செய்யும் விதிவிலக்கான ஷாப்பிங், பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார அனுபவங்களை வழங்குகிறது.
துபாயின் சுற்றுலா ஆணையம் 2025 ஆம் ஆண்டில் வரவிருக்கும் முக்கிய நிகழ்வுகளையும் அவற்றின் எதிர்பார்க்கப்படும் தேதிகளையும் அறிவித்துள்ளது. அவற்றைப் பின்வருமாறு பார்க்கலாம்.
துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல்
அமீரகக் குடியிருப்பாளர்கள் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலுடன் புத்தாண்டை கொண்டாடலாம். ஏனெனில் இந்த பிரபலமான ஷாப்பிங் நிகழ்வு ஜனவரி 12, 2025 வரை தொடரும். DSFஇன் கடைசி வார இறுதியில், நாடு முழுவதும் உள்ள 3,000க்கும் மேற்பட்ட கடைகளில் 25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
சீன புத்தாண்டு
புத்தாண்டைத் தொடர்ந்து, ஜனவரி 24, 2025 முதல் பிப்ரவரி 2 வரை ‘Spring Festival’ என்று அழைக்கப்படும் சீனப் புத்தாண்டு தொடங்கும். சீனப் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நகரம் முழுவதும் கொண்டாட்டங்கள், பல்வேறு நேரடி பொழுதுபோக்கு நிகழ்வுகள், சிறப்பு விளம்பரங்கள், கண்கவர் பட்டாசுகள், கலாச்சார நடவடிக்கைகள் போன்றவை இடம்பெறும்.
துபாய் ஃபேஷன் சீசன்
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள ஃபேஷன் பிரியர்களுக்காக, துபாய் ஃபேஷன் சீசன் 2025 ஆம் ஆண்டில் துபாய்க்கு வரவுள்ளது. வசந்த/கோடைகால கலெக்ஷன் அடுத்த ஆண்டின் முதல் பாதியிலும், இலையுதிர்/குளிர்கால கலெக்ஷன் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியிலும் காண்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரமலான் மற்றும் ஈத் அல் ஃபித்ர்
புனித மாதமான ரமலான் மற்றும் ஈத் அல் பித்ர் ஆகிய இஸ்லாமிய பண்டிகைகள் பிப்ரவரி 28, 2025 முதல் தொடங்கி ஏப்ரல் 6 வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், துபாய் முழுவதும் சமூக நிகழ்வுகள், கலைப்படைப்புகள் மற்றும் அலங்கார விளக்கு நிறுவல்கள், இரவு சந்தைகள், ரமலான் கூடாரங்களில் சிறப்பு மெனுக்கள் மற்றும் சில்லறை சலுகைகள் உட்பட பலவிதமான சாப்பாட்டு அனுபவங்கள் இடம்பெறும்.
புனித ரமலான் மாதம் முடிந்த பிறகு, ஈத் அல் ஃபித்ர் தொடங்கும். இதன் போது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் சிறப்பு தள்ளுபடிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம், மலிவான தங்குமிடப் பேக்கேஜ்களை முன்பதிவு செய்யலாம் மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்களை அனுபவிக்கலாம்.
இ-சேல் தள்ளுபடிகள்
மூன்று நாள் இ-சேல் நிகழ்வானது, ஷாப்பிங் செய்பவர்களுக்கு 30 சதவீதத்தில் தொடங்கி 95 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும். ஆடைகள், ஆடம்பர அழகுசாதனப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான தயாரிப்புகளில் சலுகைகளை அனுபவிக்கலாம்.
துபாய் கேம்ஸ் மற்றும் டிஜிட்டல் ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல்
துபாய் கேமிங் மற்றும் ஸ்போர்ட்ஸின் முன்னணி மையமாக இருப்பதால், நகரம் 17 நாட்களுக்கு எமிரேட் முழுவதும் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை நடத்துகிறது. இவை ஏப்ரல் 25 முதல் மே 11, 2025 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, ‘கேம் எக்ஸ்போ’ எனப்படும் சிறப்பு கல்வி முயற்சிகள் மே 7 மற்றும் 8, 2025 இல் தொடங்கப்படும். ‘Game Expo Summit’ மே 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் தொடங்கப்படும், அதைத் தொடர்ந்து மே 9 முதல் 11 வரை துபாய் உலக வர்த்தக மையத்தில் உள்ள ஜபீல் அரங்குகள் 2 மற்றும் 3 இல் ‘கேம் எக்ஸ்போ’ கண்காட்சி நடைபெற உள்ளது.
3 நாள் சூப்பர் சேல்
முக்கிய ஷாப்பிங் நிகழ்வுகளில் ஒன்றான, ‘3 டே சூப்பர் சேல்’ நிகழ்வின் முதல் பதிப்பு மே 2025ல் நடைபெறும் மற்றும் இரண்டாவது பதிப்பு நவம்பர் 2025 இல் நடைபெறும்.
2025ல் திரும்பும் இந்த ஷாப்பிங் நிகழ்வில், ஆடை, காலணிகள், பாகங்கள், எலக்ட்ரானிக்ஸ், மரச்சாமான்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளில் 25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை சலுகைகள் வழங்கப்படும்.
ஈத் அல் அதா
அடுத்த ஆண்டு ஜூன் 2 முதல் 8 வரை ஈத் அல் அதா பண்டிகை கொண்டாடப்படும். பண்டிகையை முன்னிட்டு துபாய் முழுவதும் உள்ள ஷாப்பிங் மால்கள் தள்ளுபடிகளை வழங்கும் மற்றும் உணவகங்களில் பல்வேறு சுவையான உணவுகளை ருசிக்கலாம். இவை தவிர, வான வேடிக்கைகள் மற்றும் கச்சேரிகள் உள்ளிட்ட நேரடி பொழுதுபோக்கு நிகழ்வுகள் இடம்பெறும்.
துபாய் சம்மர் சர்ப்ரைசஸ்
வரவிருக்கும் 2025ல் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், துபாய் அதன் சுற்றுலாவாசிகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு வீட்டிற்குள் நேரத்தை செலவிடுவதற்கும், வெயில் காலத்தை சிறந்ததாக மாற்றுவதற்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 31, 2025 வரை இயங்கும் என்று எதிர்பார்க்கப்படும் துபாய் சம்மர் சர்ப்ரைஸும் இதில் அடங்கும். இந்த காலகட்டத்தில் ஷாப்பிங் சலுகைகள், பொழுதுபோக்கு, உணவு அனுபவங்கள் மற்றும் எண்ணற்ற செயல்பாடுகள் இருக்கும்.
பள்ளிகள் திறக்கும் சீசன்
கோடை விடுமுறை முடிந்து, செப்டம்பர் 2025ல் புதிய கல்வியாண்டு தொடங்கும். 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-28 வரை துபாய் முழுவதும் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் பள்ளிகள் தொடர்பான விற்பனையை நடத்துவார்கள். எனவே, புதிய பள்ளி பொருட்கள் மற்றும் தேவையான நோட்டுப் புத்தகங்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரமாக இருக்கும்.
ஹோம் ஃபெஸ்டிவல்
இந்த காலகட்டத்தில் நாட்டின் வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து குளிர்ந்த வெப்பநிலை நிலவும். குறிப்பாக, அக்டோபர் 3-16 வரை துபாய் ஹோம் ஃபெஸ்டிவலை நடத்துகிறது, இது வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் விளம்பரங்களை வழங்குகிறது. இந்த நேரத்தில் குடியிருப்பாளர்கள் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள் பயன்படுத்தி, தங்கள் வீட்டு அலங்காரத்தை மாற்றலாம்.
தீபாவளி கொண்டாட்டங்கள்
விளக்குகளின் திருவிழாவான தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் 17-26 வரை துபாயில் முக்கிய தள்ளுபடிச் சலுகைகள், நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் இடம்பெறும்.
துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச்
துபாயின் பிரபலமான வருடாந்திர நிகழ்வுகளில் ஒன்றான துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் நவம்பர் 1 முதல் 30, 2025 வரை நடைபெற உள்ளது. இந்த சவால் நண்பர்கள், குடும்பத்தினர், பார்வையாளர்கள், சக ஊழியர்கள் மற்றும் சமூகத்தின் உறுப்பினர்களை பங்கேற்க அனுமதிக்கிறது. இந்த மாபெரும் உடற்பயிற்சி நிகழ்வில் பங்கேற்பவர்கள் 30 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
UAE யூனியன் தின கொண்டாட்டங்கள்
ஆண்டின் இறுதியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் யூனியன் தின கொண்டாட்டங்கள் நடைபெறும். டிசம்பர் 1-3 வரை மூன்று நாள் கொண்டாட்டங்களில் சிறப்பு ஷாப்பிங் சலுகைகள், பட்டாசுகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் அடங்கும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel