துபாயில் பிரத்யேகமான உபகரணங்கள் பொருத்தப்பட்ட மாற்றுத்திறனாளி வாடிக்கையாளரின் காரை சேதப்படுத்திய குற்றத்திற்காக, உணவகத்தின் உரிமையாளர் மற்றும் அதன் வாலட் பார்க்கிங் (Valet Parking) ஓட்டுநர் ஆகிய இருவரும் இணைந்து சுமார் 85,000 திர்ஹம்ஸ் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று துபாய் சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட மாற்றுத்திறநாளி நபர், உணவகத்திற்கு வந்ததும் தனது காரை அங்கிருந்த வேலட் பார்க்கிங் டிரைவரிடம் ஒப்படைத்து தனது தேவைகளுக்கு ஏற்ப காரை மாற்றியமைத்திருப்பதாகவும், அது மற்ற வாகனங்களில் இருந்து வேறுபட்டது என்றும் அவரிடம் விளக்கமாகக் கூறி பாதுகாப்பாக காரை நிறுத்துமாறு தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த வேலட் டிரைவர் நடைபாதையில் மோதி காருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் மாற்றுத்திறனாளி தனது நீதிமன்ற சமர்ப்பிப்பில், தனது சம்பளத்தில் காரை வாங்கியதாகவும், அலுவலக வேலைக்காகவும் தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காகவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த காரையே தான் நம்பியிருப்பதாகவும் கூறி தனது அன்றாட வாழ்க்கையில் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், விபத்துக்குப் பிறகு, காரின் குறிப்பிடத்தக்க தேய்மானத்தை மேற்கோள் காட்டி, காப்பீட்டு நிறுவனம் அதன் சந்தை மதிப்பில் 50 சதவீதத்தை இழந்ததைக் காரணம் காட்டி, சேதங்களை இழப்பீடு வழங்க மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளார். எனவே காரின் இழப்பு தனது வேலைப் பொறுப்புகளை நேரடியாகப் பாதித்ததுடன் மற்றொரு காரை வாடகைக்கு எடுப்பது மற்றும் மாற்றியமைப்பது உட்பட கூடுதல் நிதிச் சுமைகளுக்கு வழிவகுத்தது என்று வேதனை தெரிவித்ததுடன், சேதங்கள், இழந்த மதிப்பு மற்றும் அது தொடர்புடைய செலவுகளுக்கு இழப்பீடாக 180,000 திர்ஹம்களைக் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
பிரதிவாதி தரப்பு வாதம்
இதனை எதிர்த்து வாதிட்ட உணவகமும், வாலட் ஓட்டுநரும் அவரது கோரிக்கையை மறுத்ததுடன், காரை பழுதுபார்த்ததற்கான இன்வாய்ஸ்கள் அல்லது பழுதுபார்ப்பு செலவு விவரங்கள் உட்பட கூறப்படும் சேதங்களுக்கு போதுமான ஆதாரங்களை அவர் வழங்கத் தவறியதாக கூறியுள்ளனர். மேலும், காரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை அவர் போதுமான அளவில் ஓட்டுநருக்கு விளக்கவில்லை என்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், விபத்தின் சூழ்நிலைகளை மதிப்பிடுவதற்கும், சேதங்களின் அளவை மதிப்பிடுவதற்கும், ஒவ்வொரு தரப்பினரின் பொறுப்புகளைத் தீர்மானிப்பதற்கும் ஒரு தொழில்நுட்ப நிபுணரை நியமிக்குமாறு உணவகம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், காரின் சந்தை மதிப்பு மற்றும் காப்பீட்டுக் கொள்கையின் கீழ் அவர் ஏற்கனவே ஏதேனும் இழப்பீடு பெற்றுள்ளாரா என காப்பீட்டு நிறுவனத்திடம் விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
என்ன நடந்தது?
உணவகத்தின் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையின் படி, நீதிமன்றம் நியமித்த நிபுணர் வாகனத்தை பரிசோதித்து, அது பல சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதால் பழுதுபார்ப்பது பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது என்பதைக் கண்டறிந்துள்ளார். கூடவே விபத்திற்கான பழுதுபார்ப்புச் செலவு 80,000 திர்ஹம்ஸ் மற்றும் காரின் சந்தை மதிப்பு 75,000 திர்ஹம்ஸ் என்பதையும் நிபுணர் மதிப்பிட்டுள்ளார்.
மேலும், மாற்றுத்திறனாளி நபர், காரின் ஆக்சிலரேட்டர் மற்றும் பிரேக் பெடல்களை இடமாற்றம் செய்தல் உட்பட வாகனத்தை மாற்றியமைத்துள்ளார் என்பதையும் அவர் அந்த அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மாற்றங்கள், பாதிக்கப்பட்டவரின் பயன்பாட்டிற்கு அவசியமாக இருந்தாலும், அத்தகைய மாற்றங்கள் அறிமுகமில்லாத ஒரு சராசரி ஓட்டுனருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். ஆகவே, காரின் மதிப்புக்கு வாதிக்கு இழப்பீடு வழங்கவும், பொறுப்பு மற்றும் காப்பீடு தொடர்பான கூடுதல் பரிசீலனைகளை மற்றொரு சிறப்பு நிபுணரிடம் குறிப்பிடவும் அந்த நிபுணர் பரிந்துரைத்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
அனைத்து தரப்பு வாதத்தையும் விசாரணை செய்த நீதிமன்றம், சொத்து சேதம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக வாலட் டிரைவருக்கு தண்டனை விதித்த போக்குவரத்து நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் மூலம் அவர் கவனக்குறைவாக இருந்ததாக நீதிமன்றம் முடிவு செய்தது. மேலும், உணவகமும் அதன் ஊழியர்களும் கூட்டாக மற்றும் பலவிதமான சேதங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, காரின் சந்தை மதிப்பான 75,000 திர்ஹம்சை இழப்பீடாகவும், பிரத்யேகமாக பொருத்தப்பட்ட வாகனத்தை இழந்ததால் ஏற்பட்ட தார்மீக சேதங்களுக்கு கூடுதலாக 10,000 திர்ஹம்சையும் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த தீர்ப்பு வாலட் ஊழியர்களுக்கு சரியான பயிற்சியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், குறிப்பாக மாற்றுத்திறனாளி நபர்களுக்காக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களைக் கையாளும் போது, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பொறுப்புடன் செயல்பட வேண்டியை அவசியத்தை வலுப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel