ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், அரசாங்க நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மூன்று மேலாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்த சம்பவம் ஒன்று துபாயில் நடந்துள்ளது. அதாவது அரசாங்க அலுவலகங்களுக்கு வரும் மக்களின் பொது அணுகலைத் தடுத்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
மேலாளராக பணிபுரிந்து வந்த இந்த மூன்று நிர்வாகிகளும் தனக்கென பெரிய ஆஃபிஸை உருவாக்கிக் கொண்டு, “அரசாங்கம் புத்திசாலி.. மற்றும் பணப் பரிமாற்றங்கள் டிஜிட்டல் ஆகிவிட்டது.. மற்றும் இணையதளங்கள் தான் மக்களின் தேவைகளையும் முகவரிகளையும் பெற்று, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்ற சாக்குப்போக்குகளைச் சொல்லி மக்களை சந்திப்பதையோ அல்லது மக்கள் அவர்களை அணுகுவதையோ தடுத்துள்ளனர்” என்று ஷேக் முகமது குற்றங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த அதிகாரிகள் தங்களின் ஆஃபிஸிற்கு வெளியே செயலாளர்களையும், செக்யூரிட்டிகளையும் நியமித்து அவர்களை மீறி பொதுமக்கள் அணுக முடியாத அளவிற்கு சென்றதாகவும் துபாய் ஆட்சியாளர் கூறியுள்ளார். துபாய் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ‘mystery shopper’ என்ற பெயர் அறியப்படாத வாடிக்கையாளர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த குழுவானது அனைத்து அரசாங்கத் துறைகளிலும் இரகசிய ஆய்வை மேற்கொண்டு அது பற்றிய அறிக்கையை ஆட்சியாளருக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்வைத் தொடர்ந்து, துபாய் ஆட்சியாளர் ஒரு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளார். அதில்: “எங்கள் வெற்றிக்கான திறவுகோல் மக்களுக்கு சேவை செய்வதிலும், அவர்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதிலும், அவர்களுடன் தொடர்ந்து தொடர்புகொள்வதிலும் உள்ளது. இவை எங்கள் அரசாங்கக் கொள்கைகள் – அவை மாறவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“மேலும் நாங்கள் மாறிவிட்டோம் என்று நினைப்பவர்களுக்கு, நாங்கள் அவர்களை மாற்றுவோம்” என்று அரசாங்க நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர் கடுமையான நினைவூட்டலையும் வழங்கியுள்ளார். இதற்கிடையில், GDRFAயின் தலைமை இயக்குநர் முகமது அல் மரியின் சிறந்த பொதுச் சேவைக்காக துபாய் ஆட்சியாளர் அவரைப் பாராட்டியுள்ளார். மேலும் GDRFA தலைவர் எப்போதும் பொதுமக்களின் எல்லைக்குள் இருக்கிறார், அவரது திறந்த அலுவலகம் அனைவருக்கும் அணுகக்கூடியது என்றும் ஷேக் முகமது தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு முன்னுரிமை அளித்தல்
துபாயின் இன்றைய உலகளாவிய நற்பெயர் அதன் விரைவான சேவைகள் மற்றும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திறந்த பணிச்சூழலின் இயல்பான விளைவு என்பதை எடுத்துரைத்த துபாய் ஆட்சியாளர், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் மக்களுக்கு சேவை செய்ய துபாய் அரசு எப்போதும் தயாராக உள்ளது. இது பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொது சேவையின் மதிப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “துபாய் எமிரேட்டின் 30 ஆண்டுகால அரசாங்க வளர்ச்சியில், மக்களுக்கான திறந்த கதவுகளின் கலாச்சாரத்தை நாங்கள் நிறுவியுள்ளோம்” என்றும் ஷேக் முகமது அவர்கள் தனது X தள பதிவில் பெருமையுடன் கூறியுள்ளார். இது தவிர “சிறந்த அரசு சேவை என்பது அமீரகத்தில் வசிக்கும் மக்களின் உரிமை” – இது ஒருபோதும் சமரசம் செய்யப்படாது என்று ஷேக் முகமது குறிப்பிட்டுள்ளார்.
UAE Mystery Shopper பயன்பாட்டின் மூலம், குடியிருப்பாளர்கள் அரசாங்க சேவைகளை மதிப்பிட உதவலாம். 2020 இல் தொடங்கப்பட்ட இந்தச் சேவையானது, ஊழியர்களின் அணுகுமுறை, காத்திருப்பு நேரம், கட்டணச் சிக்கல்கள் மற்றும் பார்க்கிங் மேலாண்மை போன்ற காரணிகள் உட்பட, அரசு மையங்களில் மக்கள் தங்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மதிப்பீடு செய்ய அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel