ADVERTISEMENT

துபாயில் புத்தாண்டு: 8 மணி நேர படகு சவாரிக்கு 3.6 லட்சம் திர்ஹம்ஸ்..!! உச்சம் தொடும் படகு வாடகை..

Published: 30 Dec 2024, 7:15 PM |
Updated: 30 Dec 2024, 7:18 PM |
Posted By: Menaka

துபாய் முழுவதும் நாளை செவ்வாய்க்கிழமை இரவு வானை அலங்கரிக்கும் கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் ட்ரோன் ஷோக்களுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டவிருக்கிறது. அவ்வாறு இரவு வானத்தை ஒளியூட்டும் வண்ணமயமான பாட்டாசு காட்சிகளை எமிரேட்டின் நீர்ப்பரப்பில் மிதந்தவாறு ரசிப்பது அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும்.

ADVERTISEMENT

நீர்ப்பரப்பில் பிரதிபலிக்கும் பட்டாசு காட்சிகளுக்கும் வானில் ஜொலிக்கும் காட்சிகளுக்கும் நடுவில் இருந்து புத்தாண்டுக் கொண்டாட்டங்களை அனுபவிக்கும் போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அத்தகைய அனுபவத்தைத் தேடும் பார்வையாளர்கள், ‘Dubai yacht’ எனப்படும் துபாய் படகை தேர்வு செய்வார்கள். அந்தவகையில் செவ்வாய்கிழமை மாலை, இந்த படகுகளுக்கான வாடகை எட்டு மணி நேர பயணத்திற்கு சுமார் 360,000 வரை அதிகரிக்கலாம் என்று நிறுவனத்தின் பணியாளர்கள் கூறுகின்றனர்.

வழக்கமான விலையை விட இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு கூட அதிகமாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, ‘லம்போர்கினி’ போன்ற சில பிரீமியம் படகுகளுக்கான கட்டணங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், அவற்றின் வாடகை வழக்கத்தை விட கணிசமாக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

வழக்கமான நாட்களில், ‘லம்போர்கினி’ ஒரு மணி நேரத்திற்கு சுமார் 15,000 திர்ஹம்ஸ்க்கு வாடகைக்கு விடப்படுகிறது, எட்டு மணி நேர பயணத்திற்கு மொத்தம் 120,000 திர்ஹம்ஸ் வரை செலவாகும். ஆனால், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, இதன் வாடகை சுமார் 360,000 திர்ஹம்ஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து படகு சேவையில் உள்ள ஒரு நிறுவனம் கூறுகையில், டிசம்பர் 31 ஆம் தேதிக்கு அந்நிறுவனம் ஏற்கனவே 10 முன்பதிவுகளைப் பெற்றுள்ளதாகவும், தேதி நெருங்கும்போது அந்த எண்ணிக்கை 30 ஆக உயரும் என்றும் கூறியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் கடைசி சில மணிநேரங்களில் தொடங்கி 2025 ஆம் ஆண்டின் முதல் சில மணிநேரங்களில் முடிவடையும் நடுத்தர படகு பயணத்திற்கு சுமார் 65,000 திர்ஹம்ஸ் முதல் 75,000 திர்ஹம்ஸ் வாடகைக்கு விடலாம் என்றும் படகு சவாரி ஆப்பரேட்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இது வழக்கமான நாட்களில் ஆறு மணி நேர சவாரிக்கான படகின் வாடகை 12,000-15,000 திர்ஹம்ஸ் வரை இருக்கும் எனவும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வழக்கமான வாடகையை விட விலைகள் ஐந்து மடங்கு அதிகரிக்கக்கூடும் என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஒரு படகு வாடகை நிறுவனத்தின் விற்பனை மேலாளர் பேசுகையில், புத்தாண்டு தினத்தன்று துபாய் துறைமுகத்தில் இருந்து 800 படகுகள் புறப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடற்பகுதியில் போக்குவரத்து நெரிசல்

புத்தாண்டு கொண்டாட்டத்தின்  போது, ​​எமிரேட்டின் கடற்பரப்பில் பல்வேறு அளவுகள் மற்றும் திறன் கொண்ட படகுகள் ஏறக்குறைய ஒரே பாதையில் செல்லும் என்பதால், துபாயின் கடற்பகுதியில் சில போக்குவரத்து நெரிசலை எதிர்பார்ப்பதாக படகுகளை இயக்கும் கேப்டன்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தங்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தீவிர பயிற்சியை மேற்கொள்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பொதுவாக, துபாய் ஹார்பரில் இருந்து புறப்படும் படகுகள் கப்பல்துறையை விட்டு முதலில் மெரினாவிற்கும், பின்னர் JBR மற்றும் புளூவாட்டர், அட்லாண்டிஸ் பகுதிக்கு சென்று பின்னர் இறுதியாக புர்ஜ் அல் அரபுக்கும் செல்லும். இந்த வழித்தடங்களில் கணகவர் புத்தாண்டு வானவேடிக்கைகளை கொண்டாட்டக்காரர்கள் காண்பது மிகவும் எளிதானதாகும்.

கூடுதலாக, புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது கடல் பயணத்தை விரும்பும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, 33 மீட்பு படகுகள் நீர்வழிகளில் நிறுத்தப்படும் என்று துபாய் காவல்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel