சமீபத்திய கணக்கெடுப்புகளின் படி, கோடிக்கணக்கான இந்தியர்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும் வசித்து வருகின்றனர். இந்தியாவில் பிறந்து, வளர்ந்து பின்னர், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், வணிகம், தொழில் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சர்வதேச நாடுகளுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பேர் புலம்பெயர்கின்றனர்.
அவ்வாறு வேலைவாய்ப்புக்காகவும், சொந்த தொழிலுக்காகவும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் நாட்டில் மிகப்பெரிய வெளிநாட்டு சமூகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆம், சுமார் 3,554,274 (35.54 லட்சம்) இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில் 38% க்கும் அதிகமானோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆவர்.
இப்படி, மில்லியன் கணக்கான இந்தியர்களின் இரண்டாவது வீடாக ஐக்கிய அரபு அமீரகம் இருப்பதற்கு சில சுவாரஸ்யமான காரணங்களும் உள்ளன. அதில் பெரும்பாலான இந்தியர்களின் விருப்பமான நாடாக அமீரகம் திகழ்வதற்கு முக்கியமான எட்டு காரணிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அது என்ன என்பதைப் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
1.வேலை வாய்ப்பு
ஒரு காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு எண்ணெய் வர்த்தகத்தை மட்டுமே நம்பியிருந்த ஐக்கிய அரபு அமீரகம், இப்போது தொழில்நுட்பம், சுகாதாரம், ரியல் எஸ்டேட், சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பம் என பலவகையாக மாறியுள்ளது. இதனால், உலகெங்கிலும் உள்ள தொழில் வல்லுநர்கள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் சிறந்த நாடாக உருவெடுத்துள்ளது. கவர்ச்சிகரமான சம்பளம், வரிச் சலுகைகள் மற்றும் மகிழ்ச்சியான பணிச்சூழல் ஆகியவற்றின் காரணமாக வேலைவாய்ப்பு தேடும் பெரும்பாலான இந்தியர்கள் அமீரகத்தை தேர்வு செய்கின்றனர்.
2. வணிக நட்பு சூழல் அமைப்பு
அமீரகம் நீண்ட காலமாக தொழில்முனைவோருக்கு விருப்பமான தேர்வாக இருந்து வருகிறது, உள்ளூர் கூட்டாளர் தேவையின்றி வணிகங்களுக்கு 100% வெளிநாட்டு உரிமையை அனுமதிக்கும் இலவச மண்டலங்களை (free zone) வழங்குகிறது. இந்த மண்டலங்களில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீதான வரி விலக்குகள், தனிப்பட்ட அல்லது பெருநிறுவன வரிகள் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட உரிம செயல்முறைகள் போன்ற பல சலுகைகள் வழங்கப்படுகிறது,
இதன் காரணமாக, இந்திய தொழில்முனைவோர் ஆர்வத்துடன் அமீரகத்தில் தொழில் தொடங்குகின்றனர். மேலும், அமீரகத்தில் குறைந்தபட்ச அதிகாரத்துவம் மற்றும் திறமையான ஆன்லைன் பதிவு அமைப்புகள் உள்ளன. இவை தவிர, நீண்ட கால விசாக்கள் மற்றும் நிலையான பொருளாதார சூழல் போன்ற சலுகைகளுடன் அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை தீவிரமாக ஆதரிப்பதும் முக்கியக் காரணமாகும்.
3. வரியில்லா சம்பளம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு வரி இல்லாத வருமானம் மற்றும் குறைந்த கார்ப்பரேட் வரி போன்ற பல நிதி நன்மைகளையும் அரசாங்கம் வழங்குகிறது. நாட்டில் AED 375,000 வரையிலான வருமானத்திற்கு 0% வரி விகிதத்தையும், 375,000 க்கு மேல் வரி விதிக்கக்கூடிய வருமானத்திற்கு 9% போட்டி கார்ப்பரேட் வரி விகிதத்தையும் கொண்டுள்ளது, இது உலகின் மிகக் குறைந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
மேலும் நாடு இரட்டை வரி ஒப்பந்தத்தையும் வழங்குகிறது, இது வெளிநாடுவாழ் இந்தியர்கள் இரண்டு முறை வரி செலுத்தும் சுமையை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்கிறது. ரியல் எஸ்டேட் மற்றும் பல்வேறு வளர்ந்து வரும் துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்குகிறது.
4. விசா நன்மைகள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் UAE கோல்டன் விசா, துபாய் விசா ஆன் அரைவல், துபாய் டூரிஸ்ட் விசா மற்றும் இரண்டு வருட வேலைவாய்ப்பு விசா உள்ளிட்ட இந்தியர்கள் தங்குவதற்கும், வேலை செய்வதற்கும், முதலீடு செய்வதற்கும் எளிதாக்குவதற்காக பல விசா திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
5. உள்கட்டமைப்பு
ஐக்கிய அரபு அமீரகம் ஒரு தரமான மற்றும் வலுவான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்பதை உலக நாடுகள் அறியும். நாட்டின் உள்கட்டமைப்பைப் பற்றி பேசும்போது, அதில் ஏழு எமிரேட்டுகளையும் இணைக்கும் நவீன நெடுஞ்சாலை நெட்வொர்க், விரிவான மெட்ரோ அமைப்புகள், சர்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்கள், உலகளவில் 200க்கும் மேற்பட்ட நகரங்களை இணைக்கும் ஆறு தேசிய விமான நிறுவனங்கள், எதிஹாட் ரயில் எனப்படும் தேசிய இரயில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், மற்றும் பல உள்கட்டமைப்புகள் அடங்கும்.
6. சுகாதார அமைப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார அமைப்பு உலகின் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. நாடு முழுவதும் மேம்பட்ட மருத்துவ வசதிகள் மற்றும் சிறந்த மருத்துவமனைகள் உள்ளது. அமீரகத்தைப் பொறுத்தவரை தனியார் மற்றும் பொது மருத்துவமனைகள் என எங்கும் மருத்துவம் பார்க்கும் வகையில் மெடிக்கல் இன்சூரன்ஸ் திட்டம், நாட்டில் பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் மற்றும் முன்னோடி தொழில்நுட்பங்கள், அதாவது ரோபோடிக் அறுவை சிகிச்சைகள், டெலிமெடிசின் மற்றும் அணியக்கூடிய ஹெல்த்கேர் சாதனங்கள் என பல்வேறு வசதிகள் கிடைக்கின்றன.
7. கல்வி
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்காற்றுவது கல்விதான். அந்தவகையில், UAE உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குகிறது. நாட்டில் உள்ள எண்ணற்ற பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மற்றும் இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (ICSE) போன்ற இந்திய பாடத்திட்டங்களை சர்வதேச பாடத்திட்டங்களுடன் வழங்குகின்றன. நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் சுமார் 60 சர்வதேச பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளன, இது பரந்த அளவிலான படிப்புகள் மற்றும் வலுவான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை வழங்குகிறது.
8. பாதுகாப்பு
ஒரு நாட்டில் அமைதியும், பாதுகாப்பும் கிடைத்தால் தான் மக்கள் நிம்மதியாக அங்கு வாழ முடியும். அப்படி இருக்கையில், ஐக்கிய அரபு அமீரகம் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அமீரகத்தில் குறைந்த குற்ற விகிதம் மற்றும் அதிக விழிப்புடன் கூடிய சட்ட அமலாக்கம் உள்ளது. இது அதன் குடிமக்களுக்கு மட்டுமல்ல, நாட்டில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களுக்கும் பாதுகாப்பான சூழலை வழங்குகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel