இந்த டிசம்பர் மாதம் அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் துபாயிலிருந்து வெளிநாடுகளுக்கு பறக்கும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் பயணத்தை கவனமாக திட்டமிடுமாறும் துபாயின் முதன்மையான விமான நிறுவனம் எமிரேட்ஸ் பரிந்துரைத்துள்ளது.
மேலும், பயணிகள் புறப்படுவதற்கான பிஸியான நாட்களையும் விமான நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. எமிரேட்ஸ் வெளியிட்ட தகவல்களின் படி, டிசம்பர் 12 முதல் 15 வரை, டிசம்பர் 20 முதல் 22 வரை, டிசம்பர் 27 முதல் 29 வரையிலான நாட்களில் நாள் ஒன்றுக்கு 88,000 பயணிகளுக்கு மேல் புறப்படுவார்கள் என்றும், இந்த காலகட்டத்தில் விமான நிலையம் மிகவும் பரபரப்பாக காணப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஆகவே, துபாய் ஏர்போர்ட் வழியாக பயணிக்க திட்டமிட்டுள்ள பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வருமாறும், செக்-இன் மற்றும் பேக்கேஜ் டிராப் விருப்பங்களுக்கு அமீரகம் முழுவதும் உள்ள வசதிகளை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் கூறியுள்ளது.
வெளியான புள்ளிவிபரங்களின் படி, கடந்த ஆண்டு தினமும் 75,000க்கும் அதிகமான எமிரேட்ஸ் வாடிக்கையாளர்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) புறப்பட்டதும், ஆனால் நடப்பு ஆண்டான 2024-ல் இந்த எண்ணிக்கை சில நாட்களில் 89,000 ஆக உயர்ந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு கிட்டத்தட்ட 20 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
எமிரேட்ஸ் கேரியருடன் பயணிக்கும் விருந்தினர்கள், இத்தகைய பண்டிகை மற்றும் விடுமுறைக் காலங்களில் விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க, புறப்படும் நேரத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன் ஆன்லைனில் அல்லது மொபைல் ஆப்ஸ் மூலம் செக்-இன் செய்து கொள்ளலாம் எனவும் பயணிகளை விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அவர்கள் பயணத்திற்கு முந்தைய இரவு விமான நிலையத்தில் லக்கேஜ்களை இலவசமாக டிராப்-ஆப் செய்யலாம். இந்த வசதி, புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் கிடைக்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, முதல் வகுப்பு வாடிக்கையாளர்கள் மற்றும் ஸ்கைவர்ட்ஸ் பிளாட்டினம் உறுப்பினர்களுக்கு காம்ப்ளிமன்ட்ரி செக் இன் வசதியாக, ஹோம் செக்-இன் வசதியை தேர்வு செய்யலாம்.
அதுமட்டுமல்லாமல், அஜ்மானில் இருந்து புறப்படுபவர்கள், விமானம் புறப்படுவதற்கு 4 மணி நேரம் முன்பு வரை, அஜ்மான் சென்ட்ரல் பஸ் டெர்மினலில் இருந்து 24-மணி நேர சிட்டி செக்-இன் வசதியைப் பயன்படுத்தலாம். இதற்கிடையில், அவர்களின் லக்கேஜ் தேவைகளைப் பூர்த்திசெய்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம் என்று எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பண்டிகைக் காலத்தில், மாற்றுத் திறனாளிகள், மறைந்திருக்கும் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கான (DXB) முன் திட்டமிடப்பட்ட வழிகாட்டி உட்பட, பயிற்சி பெற்ற ஊழியர்களிடமிருந்து ஆதரவைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel