ஓமன் சுல்தானகத்தில் உள்ள ராயல் ஓமன் காவல்துறை (ROP) புதிதாக வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி, ஓமனுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்போது தங்கள் சொந்த நாட்டு ஓட்டுநர் உரிமத்துடன் சுல்தானகத்தின் சாலைகளில் வாகனம் ஓட்டலாம் என கூறப்பட்டுள்ளது.
அதாவது, தங்கள் சொந்த நாடுகளில் இருந்து பெறப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்கும் வெளிநாட்டு பார்வையாளர்கள் ஓமானில் மூன்று மாதங்கள் வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள் என ராயல் ஓமன் காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த மூன்று மாத அனுமதி நாட்டிற்குள் நுழைவதிலிருந்து தொடங்குகிறது மற்றும் செல்லுபடியாகும் சுற்றுலா விசாக்கள் கொண்ட பார்வையாளர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். ஓமன் ஆட்டோமொபைல் அசோசியேஷன் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படும் சர்வதேச ஓட்டுநர் உரிமங்களும் மூன்று மாத காலத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதையும் ROP உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த சலுகை விசிட் விசாவில் வரும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஓமானில் நிரந்தரமாக வசிக்கும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் வாகனம் ஓட்டுவதற்கு ஓமன் டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் தரங்களை உறுதி செய்யும் அதே வேளையில் வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கான அணுகலை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட விதிமுறைகள், உள்ளூர் சட்டங்களை சமரசம் செய்யாமல் சுற்றுலாப் பயணிகளுக்கு இடமளிப்பதில் சுல்தானகத்தின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி எடுத்துக்காட்டுவதாக கூறப்படுகிறது.
மேலும், ஓமான் நாட்டின் போக்குவரத்து விதிமுறைகளின் கீழ், அந்நாட்டின் சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெறுவதற்கு, ஓட்டுனர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அத்துடன் இந்த வயது விதிமுறையானது சுற்றுலாவாசிகளுக்கும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel