ADVERTISEMENT

ராஸ் அல் கைமாவில் இலகுரக விமானம் விபத்து: 26 வயது இந்தியர் மற்றும் பெண் விமானி பலி..!! சுற்றிப்பார்க்க சென்ற போது நடந்த சோகம்.!!

Published: 30 Dec 2024, 4:30 PM |
Updated: 30 Dec 2024, 4:36 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 26) ராஸ் அல் கைமாவில் உள்ள ஜசிரா ஏவியேஷன் கிளப்பில் (Jazirah Aviation Club) இருந்து புறப்பட்ட இலகுரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 26 வயதான இந்திய மருத்துவர் உட்பட 2 பேர் உயிரிழந்ததாக அமீரகத்தின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (GCAA) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

நேற்று, ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்தை உறுதிப்படுத்திய ஆணையம், இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த விபத்தில் இந்திய இளைஞருடன் சேர்ந்து விமானியான 26 வயது பாகிஸ்தான் பெண் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகளின் படி, உயிரிழந்த இந்திய மருத்துவரின் பெயர் சுலைமான் அல் மஜித் எனத் தெரியவந்துள்ளது. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதும், சம்பவம் நடந்த அன்று இலகுவான விமானத்தில் சுற்றிப் பார்ப்பதற்காக வாடகைக்கு எடுத்திருந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

உயிரிழந்த சுலைமானின் தந்தை, தாய் மற்றும் இளைய சகோதரர் உட்பட அவரது குடும்பத்தினர் இந்த அனுபவத்தைப் பார்க்க ஏவியேஷன் கிளப்பில் காத்திருந்த நிலையில், கடற்கரைக்கு அருகில் உள்ள ரோட்டானா (Rotana) ஹோட்டலுக்கு அருகே மதியம் 2 மணியளவில் புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதாகவும், சுலைமானின் இளைய சகோதரர் அடுத்த விமானத்தில் செல்ல திட்டமிடப்பட்டதாகவும் உயிரிழந்தவரின் தந்தை மஜித் முகரம் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் குறித்து மஜீத் விவரிக்கையில், “முதலில், விமானம் கிளைடர் ரேடியோ தொடர்பை இழந்துவிட்டதாகவும், பின்னர் அவசரமாக தரையிறக்கப்பட்டு அதில் இருந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது, ஆனால் நாங்கள் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்ப்பதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார், மேலும் அவர் இறந்த நேரம் மாலை 4.30க்கு மேல் என பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த விமான விபத்தில் உயிரிழந்த இந்திய நாட்டைச் சேர்ந்த சுலைமானின் இறுதிச் சடங்கு, ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15 மணியளவில் அமீரகத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்களுக்கு இரங்கலைத் தெரிவித்த GCAA, அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்துவதாகத் தெரிவித்துள்ளது.

இதேபோன்று கடந்த மாதம் அமீரகத்தில் நடந்த மற்றொரு சிறிய விமான விபத்தில் விமானி மற்றும் விமான ஓட்டுநர் பயிற்சி பெற்ற மாணவர் என இருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு விமான விபத்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel