அமீரகத்திற்கு வர விரும்பும் உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்காக வேண்டி புதிய அமீரக விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டுமா..?? இதனை ஆன்லைனில் வெறும் நான்கு படிகளில் எளிதாக முடிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா..??
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் (ICP), உங்கள் மொபைல் மூலம் 30, 60 அல்லது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் நுழைவு அனுமதிக்கு (entry permit) விண்ணப்பிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த படிப்படியான செயல்முறையை வெளியிட்டுள்ளது. அந்த வழிமுறைகளை கீழே காணலாம்.
படி 1: UAEICP செயலியில் உள்நுழையவும்
Apple, Android மற்றும் Huawei சாதனங்களுக்குக் கிடைக்கும் ‘UAEICP’ ஸ்மார்ட் ஆப்ஸைப் பதிவிறக்கவும். அதன் பின், உங்கள் UAE PASS-ஐ பயன்படுத்தி செயலியில் உள்நுழைய வேண்டும். உங்கள் மொபைலில் அப்ளிகேஷனை பதிவிறக்க விரும்பவில்லை என்றால், அதிகாரப்பூர்வ ICP இணையதளம் – smartservices.icp.gov.ae மூலமாகவும் விண்ணப்ப செயல்முறையை முடிக்கலாம்.
படி 2: புதிய விசா சேவையைத் தேர்ந்தெடுக்கவும்
உள்நுழைந்த பிறகு, நீங்கள் ‘Issuance an Entry Permit (New Visa)’ என்ற சேவையைத் தேர்ந்தெடுத்து, அமீரகத்தில் வரவிருப்பது உறவினரா அல்லது நண்பரா என்பதற்கு ‘type of visa’ தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு, நீங்கள் சிங்கிள் என்ட்ரி விசா அல்லது மல்டி என்ட்ரி விசாவிற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா என்பதைச் சரிபார்த்து, இறுதியாக தங்கவிருக்கும் காலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 3: தகவலை உறுதிப்படுத்தவும்
நீங்கள் உள்நுழைவது இதுவே முதல் முறையாக இருந்தால், உங்கள் தனிப்பட்ட விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள் அல்லது நீங்கள் முன்பு பதிவு செய்த பயனராக இருந்தால், உங்கள் கோப்பில் உள்ள தரவை உறுதிப்படுத்த வேண்டியிருக்கும். மேலும், உங்கள் தொடர்பு எண் அல்லது மின்னஞ்சல் முகவரி போன்ற உங்கள் தனிப்பட்ட தகவலுக்கு ஏதேனும் அப்டேட் இருந்தால், அதற்கேற்ப மாற்றங்களைச் செய்யலாம்.
படி 4: பணம் செலுத்தவும்
இறுதியாக, விசாவிற்கு பணம் செலுத்த வேண்டும். அனுமதியின் காலத்தைப் பொறுத்து செலவு மாறுபடும். நீங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்தவுடன், அது ICP ஆல் மதிப்பாய்வு செய்யப்படும். விசா வழங்கும் செயல்முறை மிகவும் விரைவானது மற்றும் அதிகபட்சம் 48 மணிநேரம் ஆகும்.
உங்கள் விண்ணப்பத்தைப் பின்தொடர விரும்பினால், அதை ஆன்லைனில் கண்காணிக்கலாம் அல்லது ICPஐ 600522222 என்ற எண்ணில் அழைக்கலாம்.
அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, ஃபுஜைரா அல்லது உம் அல் குவைனில் உங்கள் சொந்த குடியிருப்பு விசா வழங்கப்பட்டிருந்தால், மேற்கூறிய சேவையைப் பயன்படுத்தலாம். மாறாக, நீங்கள் துபாயில் வசிப்பவராக இருந்தால், துபாய்நவ் ஆப் மூலமாகவும் ஆன்லைனிலும் செயல்முறையை முடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel