ADVERTISEMENT

துபாய்: ஷேக் ராஷீத் சாலையில் திறக்கப்பட்ட புதிய 3 வழி பாலம்..!! 71% முடிந்த அல் ஷிந்தகா காரிடார் திட்டம்..!! RTA அறிவிப்பு…

Published: 9 Dec 2024, 11:56 AM |
Updated: 9 Dec 2024, 6:41 PM |
Posted By: Menaka

துபாயில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அதன் உள்கட்டமைப்புகளை துபாய் அரசானது மேம்படுத்தி வருகிறது. அதில் மிகப்பெரும் சவாலாக விளங்கும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புதிய பாலங்களும், சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஷேக் ராஷீத் சாலையை இன்ஃபினிட்டி ப்ரிட்ஜ் உடன் இணைப்பதற்காக கட்டப்பட்டு வந்த புதிய மூன்று வழி பாலம் பொதுபோக்குவரத்திற்கு திறக்கப்பட்டதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஷேக் கலீஃபா பின் சையத் தெரு சந்திப்பு முதல் அல் மினா தெருவில் உள்ள பால்கன் இன்டர்சேஞ்ச் வரையிலான ஷேக் ரஷீத் சாலையை உள்ளடக்கிய அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டத்தின் 4-வது கட்டத்தில் இந்த பாலம் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக உள்ளதாகவும், இது மொத்தம் 4.8 கிமீ நீளத்தை உள்ளடக்கியது என்றும் RTA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தில் தற்போது 71% நிறைவடைந்துள்ளதாக அறிவித்த RTA, ஷேக் ராஷீத் சாலையில் உள்ள இரண்டாவது பாலம், அல் மினா சந்திப்பை ஷேக் கலீஃபா பின் சையத் ஸ்ட்ரீட்டுடன் இணைக்கும் என்றும், இது ஜனவரி முதல் பாதியில் திறக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து RTA இன் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவரான டைரக்டர் ஜெனரல் மத்தார் அல் தயர் அவர்கள் பேசுகையில், “நகர்ப்புற மற்றும் மக்கள்தொகை வளர்ச்சியின் தேவைகளை பூர்த்தி செய்து, அதன் வேகத்திற்கு ஏற்ப நகரத்தின் உள்கட்டமைப்பை தக்கவைத்துக்கொள்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று  குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய பாலம் ஷேக் ராஷீத் சாலையில் இருந்து இன்ஃபினிட்டி ப்ரிட்ஜ் வரை போக்குவரத்தை மேம்படுத்துகிறது என்பதையும், ஷேக் ராஷீத் சாலை சந்திப்பில் தொடங்கி ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா தெருவின் அல் மினா தெரு சந்திப்பு வரை இன்ஃபினிட்டி பிரிட்ஜுக்கு தொடர்கிறது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

மூன்று பாலங்கள்

>> ஒவ்வொரு திசையிலும் மூன்று பாதைகளுடன் 1,335 மீட்டர் நீளம் கொண்ட முதல் பாலம், ஷேக் ராஷித் சாலை மற்றும் பால்கன் இன்டர்சேஞ்ச் இடையே போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது இரு திசைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 10,800 வாகனங்கள் வரை அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

>> 780 மீட்டர் நீளம் கொண்ட இரண்டாவது பாலம் மூன்று பாதைகளைக் கொண்டது, இது ஃபால்கன் இன்டர்சேஞ்சிலிருந்து அல் வாசல் சாலையை நோக்கிய பயணத்தை எளிதாக்கும். மேலும் ஒரு மணி நேரத்திற்கு 5,400 வாகனங்கள் வரை செல்லும் திறன் கொண்டது.

>> மூன்றாவது பாலம், இரண்டு பாதைகளுடன் 985 மீட்டர் நீளம் கொண்டது, இது ஒரு மணி நேரத்திற்கு 3,200 வாகனங்கள் வரை அனுமதிக்கும், பால்கன் இண்டர்சேஞ்ச் நோக்கி செல்லும் ஜுமைரா ஸ்ட்ரீட்டிலிருந்து அல் மினா ஸ்ட்ரீட் வரையிலான போக்குவரத்தை இந்த பாலம் எளிதாக்குகிறது.

கூடுதலாக, இந்தத் திட்டத்தில் 4.8 கிலோமீட்டர் சாலைகள் மேம்பாடு, ஜுமேரா ஸ்ட்ரீட், அல் மினா ஸ்ட்ரீட் மற்றும் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா ஸ்ட்ரீட் ஆகிய இடங்களில் மேற்பரப்பு சந்திப்புகளை மேம்படுத்துதல் அத்துடன் ஷேக் ராஷீத் சாலையிலும் மற்றொன்று அல் மினா தெருவிலும் இரண்டு பாதசாரி பாலங்கள் கட்டப்படும் என்றும் RTA தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel