ADVERTISEMENT

அமீரகத்தில் அனைத்து லாட்டரிகளையும் மூட உத்தரவு..!! மூன்றிற்கு மட்டுமே அனுமதி.. GCGRA அறிவிப்பு..!!

Published: 10 Dec 2024, 1:46 PM |
Updated: 10 Dec 2024, 1:46 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகப்பெரிய பணத்தொகையை பரிசாக அள்ளித்தரும் லாட்டரி தொடர்புடைய செயல்பாடுகளை நடத்த மூன்று ஆபரேட்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், ஏற்கனவே இருக்கும் மற்ற அனைத்து லாட்டரிகளும் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கு பரிசீலிக்கப்படாது என்றும் அமீரகத்தின் பொது வணிக கேமிங் ஒழுங்குமுறை ஆணையம் (GCGRA) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, UAE லாட்டரியாக செயல்படும் தி கேம், LLC க்கு மட்டுமே நாட்டின் ஒரே லாட்டரி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. GCGRA ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஒரே லாட்டரி உரிமம் பெற்ற ஆபரேட்டரும் இதுவாகும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே, மற்ற அனைத்து லாட்டரிகளையும் மூடுவதற்கு GCGRA உத்தரவிட்டுள்ளது.

கூடுதலாக, அமீரகத்தின் கேமிங் தொடர்பான சட்டமானது நாட்டில் பல ஆண்டுகளாக இருக்கும் சில லாட்டரி நடவடிக்கைகளைத் தொடரவும் அனுமதிக்கிறது. இந்த கட்டமைப்பிற்குள், அபுதாபியின் பிக் டிக்கெட் மற்றும் துபாய் டூட்டி ஃப்ரீ போன்றவை அடங்கும். ஏறத்தாழ 30 ஆண்டுகளாக இயங்கி வரும் இவ்விரண்டு விமான நிலைய லாட்டரிகள் மட்டுமே GCGRA இன் மேற்பார்வையின் கீழ் செயல்பட அனுமதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ஏற்கனவே அமீரகத்தில் இயங்கிவந்த எமிரேட்ஸ் டிரா மற்றும் மஹ்சூஸ் போன்ற ராஃபிள் டிரா ஆபரேட்டர்கள் GCGRA இன் உத்தரவுகளுக்கு இணங்க, ஜனவரி 1, 2024 முதல் தங்கள் UAE செயல்பாடுகளை இடைநிறுத்தியுள்ளனர். இரண்டு ஆபரேட்டர்களும் தேசிய லாட்டரி உரிமத்திற்கு விண்ணப்பித்து தோல்வியடைந்தனர்.

இந்நிலையில், GCGRA அமீரகக் குடியிருப்பாளர்களுக்கு வெளியிட்ட ஒரு நுகர்வோர் ஆலோசனை அறிவிப்பில், லாட்டரி தொடர்பான வணிகம் செய்வது அல்லது உரிமம் பெறாத லாட்டரி மற்றும் வணிக கேமிங் ஆபரேட்டர்களுடன் விளையாடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

அந்த அறிவிப்பில் உரிமம் பெறாத ஆபரேட்டருடன் விளையாட அல்லது வியாபாரம் செய்யத் தேர்ந்தெடுக்கும் நபர்கள், நிதி இழப்பு, ஏமாற்றுதல் அல்லது மோசடிக்கு ஆளாகுதல், அவர்களின் தனிப்பட்ட தரவு திருடப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்படுதல் போன்ற ஆபத்துகள் குறித்து எச்சரித்துள்ளது.

கூடவே, அனுமதிக்கப்படாத லாட்டரி ஆபரேட்டர்கள் மூலம் ஃபிஷிங் அல்லது பிற இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் அபாயத்தை அதிகரிப்பது மற்றும் ஒழுங்குமுறை அல்லது குற்றவியல் விசாரணையில் சிக்குவது மற்றும் அதன் பிறகு நற்பெயருக்கு சேதம் ஏற்படுவது உள்ளிட்ட குறிப்பிடத்தக்க அபாயங்களையும் பங்கேற்பாளர்கள் எதிர்கொள்கின்றனர் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அரசின் அனுமதி பெற்ற ஒரே லாட்டரி ஆபரேட்டரான UAE லாட்டரி அதன் நடவடிக்கைகளை நவம்பர் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது, மேலும் இதில் 100 மில்லியன் திர்ஹம்ஸ் ஜாக்பாட் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன் முதல் டிராவானது வரும் டிசம்பர் 14 அன்று திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel