ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீப காலமாக துபாய், ஷார்ஜாவைத் தொடர்ந்து அஜ்மான் எமிரேட்டிலும் குடியிருப்பு இடங்களின் வாடகை கடுமையாக ஏற்றம் கண்டு வருவதாக குடியிருப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு, அஜ்மானில் வீட்டு வாடகைகள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாகக் ரியல் எஸ்டேட் முகவர்களும் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாடகை உயர்வைக் கருத்தில்கொண்டு தங்கள் வாழ்க்கை ஏற்பாடுகளை மறுபரிசீலனை செய்யுமாறு குடியிருப்பாளர்களுக்கு ரியல் எஸ்டேட் முகவர்கள் அறிவுறை வழங்கியுள்ளனர். ஏனெனில் அஜ்மானின் மையப்பகுதியில் மட்டுமின்றி எமிரேட் முழுவதும் வாடகை விலையில் கடுமையான உயர்வு இருப்பதாகவும், குடியிருப்பாளர்கள் இந்த விலையேற்றத்தால் தங்களின் பட்ஜெட்டில் பெரிய இழப்பை சந்திப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அஜ்மானில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர் ஒருவர் வாடகை அதிகரிப்பு குறித்து பேசிய போது, “வாடகை உயரும் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் இந்த அளவிற்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார். மேலும் அவர் 1BHK அபார்ட்மெண்டிற்கு ஆண்டுக்கு 11,000 திர்ஹம் செலுத்தி வந்ததாகவும், ஆனால் இப்போது ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் வாடகை 18,000 திர்ஹம்ஸிலும், 1BHK அபார்ட்மெண்ட் 25,000 திர்ஹம்ஸிலும் தொடங்குகிறது என்று ரியல் எஸ்டேட் முகவர்கள் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரியல் எஸ்டேட் முகவர்கள் கூறும் போது, முதலில் 16,000 திர்ஹம்ஸில் தொடங்கும் ஒரு 1 BHK வீடு இப்போது அதிக போட்டித்தன்மை மற்றும் மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக மிகவும் விலை உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர். எனவே அதிக வாடகை செலவுகள் காரணமாக 1BHK அபார்ட்மெண்டிற்கு பதிலாக ஒரு ஸ்டுடியோவை வாடகைக்கு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகளும் தெரிவித்துள்ளனர்.
துபாயில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்கள் அஜ்மானில் வசித்து வருகின்றனர். எனவே அத்தகைய குடியிருப்பாளர்களுக்கு மலிவு விலையில் துபாய்க்கு மாற்றாக இருந்த அஜ்மானிலும் குடியிருப்பு வாடகை ஏற்றம் கண்டுள்ளதால் சிறிய சம்பளத்தில் வசிப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அஜ்மானில் வாடகை உயர்வு:
அஜ்மானின் பல பகுதிகளில் வாடகை கணிசமாக அதிகரித்துள்ளதாக ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்கள் கூறுகின்றனர். அவர்களின் கூற்றுப்படி, 2021க்கு முன்பு 13,000 திர்ஹம் முதல் வாடகைக்கு விடப்பட்ட ஸ்டுடியோ அடுக்குமாடி குடியிருப்புகள் இப்போது சில முக்கிய சுற்றுப்புறங்களில் 22,000 திர்ஹம்களில் தொடங்குகின்றன என்பதும், ஒரு காலத்தில் 18,000 மற்றும் 22,000 திர்ஹம்ஸ்க்கு இடையில் இருந்த 1 BHK குடியிருப்புகளுக்கான வாடகை, இப்போது 35,000 திர்ஹம்ஸ் தொடங்குகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, புதிய கட்டிடங்கள் மற்றும் முக்கிய இடங்களில் 2BHK அடுக்குமாடி குடியிருப்புக்கான வாடகை 26,000 திர்ஹம்ஸில் இருந்து இப்போது 40,000 திர்ஹம்ஸ் வரை உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டுகளில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்களின் கூற்றுப்படி, ரஷிதியா 3 மற்றும் கார்னிச் பகுதி ஆகிய பகுதிகளில் குடியிருப்புக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவை அதிக தேவையுள்ள சுற்றுப்புறங்களாகக் கருதப்படுகிறது.
வாடகை உயர்வுக்கான முக்கியக் காரணம்
அஜ்மானில் இந்த வாடகை ஏற்றத்திற்கு பல காரணிகள் பங்களிப்பதாக ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, துபாய் மற்றும் ஷார்ஜாவில் வாடகைகள் அதிகரிப்பதால், பல குடியிருப்பாளர்கள் அஜ்மானில் குடியேறுவதாகவும், இதன் விளைவாக அங்கு தேவை அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கூடுதலாக, ராஸ் அல் கைமாவில் (RAK) கொண்டுவரப்படும் பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்கள் அஜ்மானில் குடியிருப்புகளுக்கான தேவையை உண்டாக்கியுள்ளன. அதாவது, RAK திட்டங்களில் பணிபுரியும் பல குடியிருப்பாளர்கள், RAK மற்றும் துபாய் போன்ற அண்டை எமிரேட்டுகளில் உள்ள அவர்களின் அலுவலகங்களுக்கு பயணம் செய்வது மிகவும் வசதியானது என்பதால் அஜ்மானில் வசிக்கத் தேர்வு செய்கிறார்கள். இதன் காரணமாகவும் வாடகை ஏற்றம் கண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இவை தவிர, புதிய பாலங்கள் மற்றும் இத்திஹாத் சாலையில் மென்மையான மூன்று-வழிச் சாலைகள் உட்பட நகரின் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாடு ஆகியவை குடியிருப்பாளர்களுக்கு நகரத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளதாகவும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கூறுகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, அஜ்மானின் வளர்ந்து வரும் வணிக நிலப்பரப்பானது, மக்கள் தொகை மற்றும் வாடகை தேவை அதிகரிப்பதற்கு மேலும் பங்களித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் முதல் பொழுதுபோக்கு இடங்கள் வரை புதிய வணிகங்கள் அஜ்மானில் திறக்கப்பட்டுள்ளன, இது அப்பகுதிக்கு அதிகமான குடியிருப்பாளர்களை ஈர்த்துள்ளது என்று ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் விளக்குகின்றனர்.
ரியல் எஸ்டேட் முகவர்களின் கூற்றுப்படி, அஜ்மானின் வாடகை விதிமுறைகளும் அதன் வளர்ந்து வரும் பிரபலத்தில் பங்கு வகிக்கின்றன. அஜ்மானின் வாடகை விதிமுறைகளின் படி, அஜ்மானில், மூன்று ஆண்டுகள் தங்கியிருந்த பிறகுதான் வாடகையை அதிகரிக்க முடியும், அதிகபட்சமாக 20 சதவீதம் அதிகரிக்கலாம். துபாயில் பணிபுரிபவர்களுக்கும், மிகவும் மலிவு விலையில் வீடுகளை நாடுபவர்களுக்கும் இது ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக இன்று வரையிலும் இருந்து வருகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel