ADVERTISEMENT

அமீரகத்தில் நாளை முதல் மழை பெய்யும்.. வெப்பநிலை 6°C ஆக குறையும்.. கடும் குளிர் நிலவும்.. NCM வானிலை முன்னறிவிப்பு..!!

Published: 24 Dec 2024, 8:09 PM |
Updated: 24 Dec 2024, 8:09 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கிறிஸ்துமஸ் தினமான நாளைய தினம் துபாய் உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்த வார இறுதி வரை மழை தொடரும் என்றும் நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) காலநிலை நிபுணர் டாக்டர் அஹ்மத் ஹபீப் அவர்கள் திங்களன்று செய்தி ஊடகம் ஒன்றில் பேசிய போது, அரேபிய கடலில் உருவாகி தென்கிழக்கில் இருந்து நகரும் ஒரு நீட்டிக்கப்பட்ட குறைந்த அழுத்த மண்டலத்தின் விளைவுகளை, திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை மதியம் வரை ஐக்கிய அரபு அமீரகம் அனுபவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த குறைந்த அழுத்த மண்டலம் கடலோர, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை மையமாகக் கொண்டு, குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெவ்வேறு பகுதிகளில், வெப்பச்சலன மேகங்கள் உருவாக வழிவகுக்கும் என்று ஹபீப் விளக்கியுள்ளார். மேலும், வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். குறிப்பாக டிசம்பர் 25ஆம் தேதி மழை எதிர்பார்க்கப்படும் முக்கிய பகுதிகளில், ஃபுஜைரா, ராஸ் அல் கைமா போன்ற வடக்குப் பகுதிகள் மற்றும் வடக்கு அபுதாபி மற்றும் துபாயின் சில பகுதிகள் அடங்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அவர் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்த மேகங்கள், அமீரகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் மலைப்பகுதிகளில் அவ்வப்போது கனமழை உட்பட பல்வேறு தீவிரமான மழைப்பொழிவைக் கொண்டு வரும் எனவும், குறிப்பாக டிசம்பர் 25 புதன்கிழமை மற்றும் டிசம்பர் 26 வியாழன் அன்று மிக முக்கியமான தாக்கம் ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கூறுகையில், “டிசம்பர் 21-ம் தேதி நிலவரப்படி, நாடு அதிகாரப்பூர்வமாக குளிர்காலத்தில் நுழைந்துள்ளது. டிசம்பர் பிற்பகுதியில் இருந்து பிப்ரவரி வரை வெப்பநிலையில் மேலும் வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது, சைபீரியா மற்றும் வடக்கு ஐரோப்பாவில் இருந்து வரும் குளிர்ந்த காற்றால் வளைகுடா பகுதி முழுவதும் வெப்பநிலை குறையும், அதே வேளையில் வடக்கு சவூதி அரேபியா போன்ற வளைகுடாவின் வடக்குப் பகுதிகள் மிகவும் குளிரான நிலையை அனுபவிக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இது தவிர, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாறுபாடு இருக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் இந்த மாதங்களில் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சராசரியாக 6°C முதல் 12°C வரை குறைந்தபட்ச வெப்பநிலையை அனுபவிப்பார்கள் எனவும், பகல்நேரத்தில் அதிகபட்சம் 25°C முதல் 27°C ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel