துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) எமிரேட்டில் உள்ள 19 குடியிருப்புப் பகுதிகளில் சாலை இணைப்புகளை மேம்படுத்தும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. சுமார் 11.5 கி.மீ நீளத்தை உள்ளடக்கிய இத்திட்டத்தில் போக்குவரத்து மேம்படுத்துதல், சாலையோர வாகன நிறுத்தம், நடைபாதைகள் மற்றும் தெரு விளக்குகள் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சாலை இணைப்புகளைப் பெறும் 19 குடியிருப்பு பகுதிகள்:
RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, துபாய் எமிரேட்டில் உள்ள அல் கவானீஜ் 1, அல் பர்ஷா சவுத் 1, நாத் ஷம்மா, ஜுமேரா 1, ஜபீல் 1, அல் ரஷிதியா, முஹைஸ்னா 1, அல் பர்ஷா 1, அல் ஹுதைபா, அல் குஸ் 1, அல் குஸ் 3, அல் குசைஸ் 2, அல் சத்வா, அல் திவால் 1, மிர்திஃப், உம் அல் ரமூல், உம் சுகீம் 1, அல் மிசார் 1 மற்றும் அல் மிசார் 2 ஆகிய இடங்களில் இந்த சாலைப் பணிகள் நடைபெறும் என தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சாலைத் திட்டப் பணிகளின் கட்டுமானப் பணிகள் 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே, இந்தப் பணிகள் நடைபெறவிருக்கும் மேற்கண்ட பகுதிகளின் புகைப்படத்தையும் RTA பகிர்ந்துள்ளது.
RTA வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த சாலை மேம்பாட்டுப் பணிகள் முழுவதுமாக நிறைவடையும் போது, இக்குடியிருப்பு பகுதிகளுக்குள் வாகனங்கள் நுழைவதும் வெளியேறுவதும் எளிதாகும் என்பதுடன், பயண நேரமும் 40 சதவீதம் வரை குறையும் எனவும் கூறப்படுகிறது.
RTAவின் இந்த திட்டம் துபாயின் பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் நகர்ப்புற விரிவாக்கத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதோடு சாலைப் பயனாளர்களுக்கு மென்மையான மற்றும் பாதுகாப்பான ஓட்டுநர் அனுபவத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel