ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி, 2025 ஆம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஆன்லைன் தரவுத்தளமான நம்பியோவின் கூற்றுப்படி, 2017 முதல் தொடர்ந்து 9 ஆண்டுகளாக உலகின் பாதுகாப்பான நகரமாக அபுதாபி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் பாதுகாப்பான நகரங்களின் 2025 தரவரிசையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட 382 உலகளாவிய நகரங்களின் பட்டியலில் அபுதாபி முதலிடத்தில் உள்ளது. இந்த தரவரிசை முன்னோடியான பாதுகாப்புத் திட்டங்களை வகுப்பதற்கும், உத்திகள் மற்றும் முன்முயற்சிகளை உருவாக்குவதற்கும், குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் அபுதாபி எமிரேட் எடுத்து வரும் முயற்சிகளை பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அபுதாபி காவல்துறை இயக்குநர் ஜெனரல் மேஜர் ஷேக் முகமது பின் தஹ்னூன் அல் நஹ்யான் அவர்கள் பேசுகையில், சமூகத்துடன் சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான சகவாழ்வின் மதிப்புகளை ஒருங்கிணைப்பதில் அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அபுதாபி காவல்துறையின் ஜெனெரல் கமாண்டில் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் துணை நிறுவனங்களின் முயற்சிகளை பாராட்டிய அவர், அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை மிக உயர்ந்த தொழில்முறை மட்டத்துடன் செய்துள்ளனர் என்றும், இது காவல்துறை, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சேவைகளின் தரத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்தில் நேர்மறையான பிரதிபலிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.