ADVERTISEMENT

அமீரகத்தின் முதல் பறக்கும் டாக்ஸி நிலையத்திற்கு DXV என்று பெயர்சூட்டிய துபாய்..!!

Published: 9 Jan 2025, 6:20 PM |
Updated: 9 Jan 2025, 6:26 PM |
Posted By: Menaka

துபாயில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் சாலைப் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2026இல் பறக்கும் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்த உள்ள நிலையில், துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) அருகில் வரவிருக்கும் இந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பறக்கும் டாக்ஸி நிலையத்திற்கு துபாய் இன்டர்நேஷனல் வெர்டிபோர்ட் (DXV) என்று தற்பொழுது பெயரிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஏர் டாக்ஸிகள் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் மற்றும் சேவை செய்வதற்கும் உருவாக்கப்படவுள்ள வணிக வெர்டிபோர்ட்டின் (vertiport) தொழில்நுட்ப வடிவமைப்பிற்கு பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (GCAA) இன்று (வியாழன்) ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த வெர்டிபோர்ட்டிற்கு DXV என்று பெயரிடப்பட்டுள்ளது.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் ஜாபி ஏவியேஷன் (Joby Aviation) ஆகியவற்றுடன் இணைந்து ஸ்கைபோர்ட்ஸ் உருவாக்கும் முதல்கட்ட ஏர் டாக்ஸி உள்கட்டமைப்பு நெட்வொர்க்கில் உள்ள நான்கு தளங்களில், துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள DXV முதன்மையானதாகும். அதுமட்டுமல்லாமல் Skyports Infrastructure (Skyports), ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள வெர்டிபோர்ட் விதிமுறைகளின் கீழ் இத்தகைய ஒப்புதலைப் பெறும் முதல் நிறுவனமாகும்.

ADVERTISEMENT

இது குறித்து ஸ்கைபோர்ட்ஸ் மற்றும் GCAA வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில், ஏர் டாக்ஸிக்கான வெர்டிபோர்ட்டின் தொழில்நுட்ப வடிவமைப்பிற்கான ஒப்புதல் நாட்டின் ஒழுங்குமுறை கட்டமைப்பில் ஒரு முக்கியமான மைல்கல் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விதிமுறைகள் எதிர்கால வான்வழி இயக்க அமைப்புகளுக்கான முக்கிய அங்கமான வெர்டிபோர்ட் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்வதாகவும், உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்புத் தரங்களுக்கான உலகளாவிய நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்ளும் அதே வேளையில், விமானப் போக்குவரத்தில் புதுமைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுதிப்பாட்டை இந்தச் சாதனை எடுத்துக்காட்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வடிவமைப்பு ஒப்புதல் செயல்முறை

2026 இல் தொடங்கப்படவுள்ள ஏர் டாக்ஸி சேவைக்கு ஏற்ப DXV வடிவமைப்பை அங்கீகரிப்பது என்பது இயற்பியல் பரிமாணங்கள், வான்வெளி பரிசீலனைகள், தடை சூழல் (obstacle environment) மீட்பு மற்றும் தீயணைப்பு சேவைகள் (RFFS) அதாவது ஸ்கைபோர்ட்ஸ் பேட்டரி மற்றும் பாரம்பரிய முறையிலான எரிபொருளால் ஏற்படும் தீ ஆகிய இரண்டு முறைக்கும் அதன் தீயணைப்பு மூலோபாயத்தை நிரூபித்துக் காட்டியது உள்ளிட்ட முக்கியமான காரணிகளின் முழுமையான மதிப்பீடு சம்பந்தப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கூறுகையில் DXV வெர்டிபோர்ட் வடிவமைப்பின் ஒப்புதல் நகர்ப்புற இயக்கத்தை மறுவரையறை செய்யும் மற்றும் வளர்ந்து வரும் விமான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதற்கான உலகளாவிய அளவுகோல்களை அமைக்கும் என்று GCAA இயக்குநர் ஜெனரல் சைஃப் முகமது அல் சுவைதி தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து Skyports இன் CEO டங்கன் வாக்கர் பேசிய போது, அமீரகம் முழுவதும் ஏர் டாக்ஸி செயல்பாடுகளை செயல்படுத்துவதற்கும் அளவிடுவதற்கும் முக்கியமான ஒழுங்குமுறைகளை மேம்படுத்துவதில் GCAA முன்னோடியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

DXV திறன்

GCAA அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின் படி, துபாய் விமான நிலையத்திற்கு அருகில் சுமார் 3,100 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவிருக்கும் பறக்கும் ஏர் டாக்சிகளுக்கான நிலையம் மின்சார சார்ஜிங் வசதிகள், பிரத்யேக பயணிகள் பகுதி மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

DXV ஆண்டுதோறும் 42,000 தரையிறக்கங்களையும் 170,000 பயணிகளையும் கையாளும் திறனைக் கொண்டிருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் ஏர் டாக்ஸி நிலையத்தின் அதிகாரப்பூர்வ செயல்பாடு 2026 முதல் காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துபாய் சர்வதேச விமான நிலையம், டவுன்டவுன், துபாய் மெரினா மற்றும் பாம் ஜுமேரா உட்பட துபாயில் நான்கு இடங்களில் அமைக்கப்படும் தரையிறங்கும் தளங்கள் சேவையின் முதல் கட்டத்தை உள்ளடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel