ADVERTISEMENT

உலகை ஈர்க்கும் துபாய்: 3.8 மில்லியனுக்கும் மேலாக உயர்ந்த மக்கள்தொகை…

Published: 17 Jan 2025, 2:47 PM |
Updated: 17 Jan 2025, 2:47 PM |
Posted By: Menaka

உலகெங்கிலும் உள்ள திறமையாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்களை அதிகளவில் துபாய் தொடர்ந்து ஈர்த்து வருவதால், 2018ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வரும் எமிரேட்டின் மக்கள் தொகை கடந்த ஆண்டு இதுவரை இல்லாதளவு அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

‘Dubai Statistics Centre’ வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, எமிரேட்டின் மக்கள்தொகை 2024 இல் 169,000 அதிகரித்து கடந்த ஆண்டு இறுதியில் 3.825 மில்லியனை எட்டியதாக கூறப்பட்டுள்ளது. நகரத்தின் மக்கள்தொகை பல ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருவதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்த புள்ளிவிபரங்களின் படி, கடந்த 2023 இல் 104,000க்கும் அதிகமாகவும், 2022 இல் 71,500 ஆகவும், 2021 இல் 67,000 ஆகவும் துபாயில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், 2020 இல் கோவிட்-19 தொற்று பரவலுக்கு மத்தியிலும் சுமார் 54,700 புதிய குடியிருப்பாளர்களை துபாய் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொற்றுநோய்களின் போது கூட துபாய் மக்களின் ஈர்ப்பை மேம்படுத்தியதற்கு  முக்கிய காரணம் நெருக்கடியை திறம்படக் கையாண்டது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

அதே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான புதிய குடியிருப்பாளர்களின் வருகையால், எமிரேட்டில் வீட்டுவசதி, போக்குவரத்து, பயன்பாடுகள், சுகாதாரம் மற்றும் கல்விக்கான தேவை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், நடப்பு ஆண்டு மற்றும் அடுத்த சில ஆண்டுகளில் தேவை கணிசமாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் துபாயின் மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பானது துபாயின் பொருளாதாரம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றின் மீதான மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, பகல் நேரங்களில், மற்ற எமிரேட்களில் வசிப்பவர்கள் வணிகம் மற்றும் வேலைக்காக துபாய்க்கு வருவதால் துபாயின் மக்கள்தொகை மேலும் ஒரு மில்லியனாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர் அண்டை எமிரேட்டான ஷார்ஜா, அபுதாபி மற்றும் அஜ்மானில் இருந்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மக்கள்தொகை அதிகரிப்பால் பயனடையும் துறைகள்

நிபுணர்களின் கருத்துப்படி, நடப்பு ஆண்டு மற்றும் அதற்குப் பிறகு நுகர்வோர் பொருட்கள், வீட்டுவசதி மற்றும் பயன்பாடுகள் போன்றவற்றின் தேவையை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் முக்கிய துறைகளின் விரிவாக்கம் ஆகியவற்றில் அதிகரித்து வரும் மக்கள்தொகை முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், அரசு தொடர்பான அனைத்து சேவைகளுக்கும், குறிப்பாக கட்டணம் தேவைப்படும் சேவைகளுக்கு குறிப்பிடத்தக்க பலன் கிடைக்கும் என்றும், தனியார் துறையில், வீட்டுவசதி, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி போன்ற துறைகள் பலனைக் காணும் என்றும் கூறுகிறார்கள்.

இதுபோன்ற பல நன்மைகளை மக்கள்தொகை அதிகரிப்புக் கொண்டிருந்தாலும், உலகளவில் பெரிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல்கள் பொதுவானதாகிவிட்டதால், உள்கட்டமைப்பிலும் இது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால், துபாய் உள்கட்டமைப்பு தேவைகளை மேம்படுத்துவதில் மிகவும் முனைப்பாக உள்ளது. எனவே, நிலையான அரசாங்க முதலீடு இந்த சிக்கல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel