கடந்த 10 ஆண்டுகளில், துபாய் சர்வதேச விமான நிலையம் 700 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை வரவேற்று உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமாக இருந்து வருகிறது என்றும், ‘துபாய் உலகின் விமான நிலையம்’ என்றும் இன்று (வியாழக்கிழமை) துணை ஜனாதிபதியும், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் கூறியுள்ளார்.
‘Airports Council International’இன் படி, DXB கடந்த 10 ஆண்டுகளில், 770 மில்லியன் பயணிகளை வரவேற்றது மற்றும் 3.3 மில்லியன் விமான இயக்கங்களைக் கொண்ட உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக இருந்தது என்று சுட்டிக்காட்டிய ஷேக் முகமது, “துபாய் உலகின் விமான நிலையம் மற்றும் விமானத் துறையில் ஒரு புதிய உலகம்” என்று மேலும் கூறியுள்ளார்.
இது குறிது வெளியான புள்ளிவிபரங்களின் படி, DXB கடந்த ஆண்டான 2024இல் மட்டும் 92 மில்லியன் பயணிகளை வரவேற்றது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் 107 நாடுகளில் 272 நகரங்களுக்கு 106 விமான நிறுவனங்கள் மற்றும் விமானங்களுடன் 440,000 விமான இயக்கங்களை கண்டதாகக் கூறப்படுகிறது.
துபாயின் புதிய விமான நிலையம்
துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) தவிர, துபாயில் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் (DWC- Dubai World Central) என்ற மற்றொரு விமான நிலையமும் உள்ளது. இது ஆரம்பத்தில் 2010 இல் சரக்கு நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டது, ஆனால் கடந்த 2013 முதல் பயணிகள் விமானங்களை உள்ளடக்கியது. இதனைத் தொடர்ந்து துபாயில் உள்ள விமான நிலப்பரப்பு அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் வரவிருக்கும் புதிய முனையத்துடன் மேலும் விரிவாக்கப்பட உள்ளது.
அதன்படி 128 பில்லியன் டாலர் செலவிலான விரிவாக்கத்தில் ஐந்து இணையான ஓடுபாதைகள் வந்து 70 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 400 விமான வாயில்களை இந்த விமான நிலையம் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. இது சம்பந்தமாக துபாய் ஆட்சியாளர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய பயணிகள் முனையத்திற்கான வடிவமைப்புகளுக்கு ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, வெளியான அறிவிப்பின் படி, 128 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் புதிய பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகள் உடனடியாகத் தொடங்கும் என்றும், புதிய டெர்மினல் கட்டி முடிக்கப்பட்டதும், DWC தற்போதைய துபாய் சர்வதேச விமான நிலையத்தை (DXB) விட ஐந்து மடங்கு பெரியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், DXBயிலிருந்து அனைத்து நடவடிக்கைகளும் படிப்படியாக அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
DXB பதிவு செய்த எண்ணிக்கை
- துபாய் விமான நிலையம் 2024 ஆம் ஆண்டில் 92.3 மில்லியன் பயணிகளை வரவேற்றதைத் தொடர்ந்து, அதன் முந்தைய சாதனையான கடந்த 2018 இல் பதிவான 89.1 மில்லியன் எண்ணிக்கையை தாண்டியது.
- இது 2024 ஆம் ஆண்டில் 81.2 மில்லியன் லக்கேஜ்களை கையாண்டதன் மூலம் நம்பமுடியாத மைல்கல்லை அடைந்தது. அதே நேரத்தில் தொழில்துறை முன்னணி வெற்றி விகிதத்தை 99.45%பராமரிக்கிறது. இதன்படி விமான நிலையமானது 1,000 பயணிகளுக்கு வெறும் 5.5 தவறாகக் கையாளப்பட்ட பைகள் என்ற விகிதத்தை அடைந்துள்ளது. இதன் மூலம், 6.9 பைகள்/1000 பயணிகள் என்ற சர்வதேச தரத்தை வீழ்த்தி புதிய சாதனையை எட்டியுள்ளது.
- பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய உயர்வு இருந்தபோதிலும், 98.2% பயணிகள் புறப்படும் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில் 10 நிமிடங்களுக்கும் குறைவாக காத்திருப்பு நேரத்தை பதிவு செய்துள்ளதாகவும், 99.2% பயணிகள் செக்யூரிட்டியில் ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான காத்திருப்பு நேரத்தை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
- இது 2024 ஆம் ஆண்டில் 2.2 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டது, இது கடந்த ஆண்டை விட 20.5% அதிகரிப்பாகும்.
- அதே போல் விமான இயக்கங்களின் எண்ணிக்கையானது 2024 இல் 5.7% அதிகரித்து 440,300 ஐ எட்டியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel